சிங்கீதம்- திரைப்பட விமர்சனம்

மனிதர்கள் தங்களது பேராசை மூலம் இயற்கையை அழித்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அதே இயற்கையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற ஆழமான கருத்தை, நவீன முறையில் காட்சிப்படுத்தி அவற்றின் அழகை இரசிக்கவும், சொல்லப்பட்டிருக்கும் கருத்து குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.
“தமிழில் பேசும்படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், சின்ன வாத்தியார், காதலா காதலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரான சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 94 வயதில் இயக்கியுள்ள புதிய படம் சிங்கீதம்.

குபேரபுரம் என்ற தங்கம் நிறைந்த கிராமத்திற்கு அயான் வருகிறார். அங்கு இயற்கையை நேசிக்கும் கவுரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதே சமயம் பழைய சுரங்கம் மூடப்பட்ட நிலையில், புதிய சுரங்கத்தை வைத்து நைஜீரிய தொழிலதிபருடன் ஒப்பந்தம் போடுகிறார் ஷாலினி கொண்டேபூடி. ஆனால், அவரோ இன்னொரு பார்ட்னர் அல்லது அவரது வாரிசு வந்தால்தான் ஒப்பந்தம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார்.

இந்தசமயம் தங்கச்சுரங்கத்தில் தனது அப்பாவிற்கும் பங்கு உள்ளது என்று கூறும் அயான், தற்போதைய சுரங்கத்தில் தங்கம் இல்லை என்கிற உண்மையை போட்டுடைக்கிறார். அதன்பின்னர் கவுரி நேசிக்கும் மரத்துக்கு கீழே தங்கம் இருப்பதாக நம்பும் கும்பல், அந்த மரத்தை வெட்டி சாய்க்கிறது. சோகம் கொண்ட கவுரி கடவுளை வேண்டுகிறார். கிராம மக்களை சபிக்குமாறு கோரிக்கை விடுகிறார். அதன் பிறகு கிராம மக்கள் அனைவரும் பேசினால் பாடலாக தான் கேட்கிறது. அதாவது எதை பேசினாலும் பாடலாக அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். கிராம மக்களின் சாபம் எப்படி நீங்கியது? என்பதே மீதிக்கதை.

அயான், கவுரி ஜோடி சண்டை கோழியாக இருந்தாலும், ஒருகட்டத்தில் அன்பில் கைகோர்க்கிறார்கள். அழுத்தமான நடிப்பாலும் கலங்கடிக்கிறார்கள். கவுரியின் நடிப்பு அபாரம்.

ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி என நடித்த அத்தனை பேருமே எதார்த்தமான நடிப்பால் கலக்குகிறார்கள். அங்கூர் சி-யின் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

தங்கத்திற்கான தேடல் என்ற விறுவிறுப்பான திரைக்கதையில் முடிந்தவரை சுவாரசியமான காட்சிகளை அடுக்கி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். வித்தியாசமான முயற்சி” சிங்கீதம்”.