ஜீவா நடிக்கும்தகப்பன் முதல் பார்வை வெளியானது

நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முதல் பார்வை உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.
‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் பேசப்படும் குடும்ப உணர்வுப் படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.