ஜெயிலர் படத்தின்இறுதியில் தனது மகனை கொன்றபிறகு ஒரு மலைக் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்). அங்கு இருக்கும் நகராட்சி அதிகாரியுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதல், அவரை பழக்கடை நடத்தும் மூர்த்தி என்பவரிடம் கார் ஓட்டுநராக கொண்டு சேர்க்கிறது.
வர்மனைக் கொன்றது யார் என்று தேடி வரும் இந்த கும்பலின் பார்வை, இறுதியில் முத்துவேல் பாண்டியன் மீது விழுகிறது. தான் ஒதுங்கி வாழ நினைத்த வன்முறை உலகத்துக்குள் மீண்டும் இழுக்கப்படும் முத்துவேல் பாண்டியன், இந்தச் சிலை கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக எப்படி முடித்துக்கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி முழுக்கவே நெல்சனின் அடையாளமான நகைச்சுவையோடு நகர்கிறது. யோகி பாபு, ’நாடோடிகள்’ நமோ நாராயணா தொடர்பான நகைச்சுவை காட்சிகள் கைகொடுத்திருக்கிறது.
இன்னொரு பக்கம் சுராஜ் வெஞ்சரமூடு – ரஜினிகாந்த் இடையிலான ஆடு புலி ஆட்டத்தை வைத்து இரண்டாம் பாதிக்கான மோதலை நிதானமாக உருவாக்கி இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் கதை கோவாவுக்கு நகரும்போது காமெடி குறைந்து ஆக்ஷன் காட்சிகள் உக்கிரமடைகின்றன. கூடவே ஒரு முக்கியமான தருணத்தில் வரும் எமோஷனல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன்,மிர்ணா, சிறுவன் ஆத்விக் உடைய நடிப்பும் வெகு சிறப்பு. முதல் பாகத்தில் இறுதியில் நடக்கும் சம்பவத்தை கொண்டு அந்த எமோஷனல் கோணத்தை நெல்சன் மிக அழகாகக் கையாண்டுள்ளார்.
75 வயதிலும் தனது கம்பீரமான ஸ்டைல், அதே நேரம் யோகி பாபு, நமோ நாராயணா உடன் சேர்ந்து அவர்களுக்கு இணையாக காமெடி என திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் ரஜினிகாந்த்.
நடிகை வித்யா பாலனுக்கு வலுவான கதாபாத்திரம். ஸ்டைலாக சிகரெட் ஊதிக் கொண்டே ரஜினிகாந்த்தை மிரட்டும் காட்சியில் ஈர்க்கிறார்.
முந்தைய பாகத்தைப் போலவே கதைக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ ஏராளமான கேமியோக்களைஇறக்கி இருக்கிறார்கள்.
படத்தில் லாஜிக் என்பது துளியளவு கூட.. இல்லை, அதிலும் இரண்டாம் பாதியை எல்லாம் மூளையை கழட்டி வைத்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்கிற நிலை.
ரஜினிகாந்த தன் பங்குக்கு ஒரு 500 பேர், எஸ்.ஜே.சூர்யா தன் பங்குக்கு ஒரு 500 பேர் என கொன்று குவிக்கிறார்கள். ஆனால் போலீஸ் என்ற ஓர் இனம் இருப்பதற்கான அறிகுறியே படத்தில் இல்லை. ஆங்காங்கே சும்மா உப்புக்கு சப்பானி போல வந்து செல்கிறார்கள். அதிலும் கேமியோவாக வரும் ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை கொண்டு வந்து உடைத்து இன்னொரு பக்கமாக வெளியேறிச் செல்கிறார்.
இதுபோன்ற லாஜிக் ஓட்டைகள் அநேகம் இருந்தாலும் ரஜினிகாந்த் என்ற மாயாஜாலத்தின் முன் அவை மறக்கப்படிப்படுகின்றன. வயது முதிர்வின் காரணமாக ரஜினிகாந்த் முந்தைய காலங்களைப் போல அதிரடியாக சண்டை போடவோ, நடனமாடவோ முடியாது என்பதை உணர்ந்து, அவரது பலவீனத்தை புரிந்து வைத்து நெல்சன் ஒரு பொழுதுபோக்கு மசாலா விருந்தை படைத்துள்ளார்.
மூன்றாம் பாகத்துக்கான குறியீட்டுடன் படம் முடிகிறது. சில சுணக்கங்கள் இருந்தாலும், தியேட்டரில் கொண்டாட்டத்துக்கான எந்தக் குறையும் வைக்காத ஒரு பக்காவான இரண்டாம் பாகமாக வந்துள்ளது ‘ஜெயிலர் 2’.