டோரத்தி- திரைப்பட விமர்சனம்

டோரத்தி  இந்த படத்திற்கு A சர்டிபிகேட் ஏன் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சி பெரிதாக இல்லை. கவர்ச்சி நடனங்கள் இல்லை. காமத்தை பற்றி பேசுவதாகவும் இல்லை காட்டுவதாகவும் இல்லை. பாலின பாகுபாட்டை பேசுகிறது அவ்வளவு தான்.  என்னை பொறுத்தவரை 12+ என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.
90களின் ஆரம்பத்தில் மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு இளைஞர்கள் பற்றிய கதை நான்-லீனியரில் சொல்லப்படுகிறது. பிற்போக்குத்தனங்கள் நிறைந்த மனிதர்கள் நிறைந்த கிராமத்தில் இருக்கும் அனைத்து அபத்தங்களும், கொடுமைகளும் காட்சி படுத்தப்படுகிறது. அந்தக் காட்சிகளை வலிக்காமல் இயல்பாக சில இடங்களில் கொண்டாட்டமாக மாற்றுவது இசைஞானி இளையராஜாவின் இசைதான்.
முதல் பாதியின் முடிவில் கிளைமாக்ஸ் வந்துவிட்டதோ என்று தோன்ற வைக்கும் அளவிற்கு காட்சியும் இசையும் கைகோர்க்கிறது. அங்கிருந்து இரண்டாம் பாதியில் அதே கதை மாந்தர்களின் முற்றிலும் வேறான கதையை காட்சிபடுத்துகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஒரு படத்திற்குள் ஒரே கதை மாந்தர்களை வைத்து இரண்டு கதைகள் எடுப்பது தான் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டைல். அவருடைய எல்லா படங்களிலும் இந்த Pattern இருக்கும். ஆனால் இந்த படத்தில் தான் மிகச்சரியாக அதனை கையாண்டு இருக்கிறார். அதாவது இந்த படத்தை இடைவேளைக்கு முன்பு ஒரு படம் இடைவேளைக்கு பின்பு ஒரு படம் என்று இரண்டு கிளைமாக்ஸ்களுடன் இரண்டு படம் இருக்கிறது.
முதல் பாதியின் முடிவில் என்னடா சேது படம் மாதிரி போகுதே என்று யோசிக்கும்போது ஒரு twist வந்து இரண்டாம் பாதிக்கு lead கொடுக்கின்றது. அந்தக் காட்சியில் இசைஞானி தனது இசையால் underline கொடுக்கின்றார்.
இரண்டாம் பாகத்தில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் அவன் அவளை பார்க்கும் போது, அவள் தன்னை வெளிப்படுத்தும் போது இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் ஆல்பத்தின் இறுதி இசை அந்தக் காட்சியை அப்படியே மேலே தூக்கி எடுத்துச் செல்லும்போது தியேட்டரில் நான் அந்தரத்தில் மிதந்ததைப் போல உணர்ந்தேன்.
திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் அதே சமயம் உணர்வுகளை சரியாக கடத்திக் கொண்டே செல்வது அற்புதம். பொன்மணி பாடல் என்னடா இன்னும் வரவில்லை?, ஒருவேளை படத்தில் தூக்கி விட்டார்களா என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இறுதியில் அவனுக்கு காதல் பூக்கும் போது மிகக் கச்சிதமாக  வருகிறது. முழு பாடலும் வரிக்கு வரி காட்சியுடன் ஒன்றி உணர்வு பிரவாகத்தை ஒரு நீரூற்று போல எழுப்பியது.
மீண்டும் இறுதிக்காட்சியில் ஹவ் டு நேம் இட் இசை காட்சியுடன் ஒன்றும் போது நமக்கு கண்ணீரை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.
அந்த இடத்தில் நான் எதிர்பாராத ஒரு ஆச்சரிய மாயத் தோற்றம் ஏற்பட்டது எனக்கு மட்டும்தானா. டோரத்தி என்ற பெயர் மட்டுமல்ல உருவமும் அங்கே கச்சிதமாக பொருந்தியது Mind-blowing.
இந்த படத்திற்கு இசைஞானிக்கு தேசியவிருது கொடுத்தால் ஆச்சரியம் இல்லை. ஆனால் இசைஞானி அதையெல்லாம் தாண்டி வந்து விட்டார். தனது இசையால் ரசிகர்கள் நமக்கு எல்லாம் விருந்து கொடுத்திருக்கிறார். Pure Divine.
மஞ்சுமேல் பாய்ஸ் படம் பார்த்தவர்களுக்கு எப்படியான கண்மணி பாடல் உணர்வு எழுச்சி கொண்டு வந்ததோ அதைவிட பல மடங்கு இதில் கிடைக்கும் ஏனென்றால் ராஜா இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் இசைக்கும் இந்த படத்தின் இசைக்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாக இசை எப்படி ஒரு படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை காட்டுகிறது.
தமிழ் சினிமாவில் இந்தப் பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க படமாக டோரதி இருக்கும்.