தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு, இயக்கம் என எல்லாம் பொருந்தி இருந்தாலும் அந்தப் படம் வெற்றியடைவதற்கு மார்க்கெட்டிங் என்பது பிரதானமாக தேவைப்படுகிறது. அப்படி இல்லா படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனதும் உண்டு. மிக சிறந்த மார்க்கெட்டிங் உத்தியால் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் சிறை.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான சிறை திரைப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. குறைவான திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் இப்படத்திற்கு காட்சிகள் அதிகரிப்பு, திரைகள் அதிகரிக்கப்பட்டன. அந்தளவிற்கு பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு நோக்கி வந்தனர். அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.
படம் வெளியாகி 75 நாட்களை நிறைவு செய்த சிறை திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டமும், படத்தில் பங்கேற்ற திரைக்கலைஞர்கள், படம்வெளியான திரையரங்க உரிமையாளர்களுக்கு சிறை கேடயம் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,
இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது.ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.
இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” நன்றி என பேசினார்.