படத்தின் ஹீரோவான பிரஜின் தன் மனைவி, தங்கையுடன் வாழ்கிறார். கொஞ்சம் வசதியானவர்தான். ஷருமிஷா, ராஜ்குமாரை காதலித்து வருகிறார். ஆனால், இந்தக் காதல் ஷருமிஷாவின் அண்ணன் பிரஜினுக்கு பிடிக்கவில்லை.
அதனால் அவசரம், அவசரமாக ஷருமிஷாவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார் பிரஜின். வரவிருக்கும் மணமகன் ரொம்பவும் கெட்டவன் என்பதை உணரும் ஷருமிஷா இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார்.
இதனால் கல்யாணத்திற்கு முன்தினம் இரவு ஷருமிஷாவை வீட்டிலேயே வைத்து பூட்டி வைக்கிறார் அண்ணன் பிரஜின். அதே சமயம் தன்னுடைய காதலனுக்கு போன் செய்து “இன்று இரவிலேயே வீட்டிற்கு வந்து என்னை காப்பாற்றி அழைத்துப் போ…” என்கிறாள் ஷருமிஷா.
இதனை நம்பி ராஜ்குமார் ஷருமிஷாவின் வீட்டுக்கு வந்து சந்திக்கிறார். ஆனால் அவ்வளவு சுலபமாக அந்த வீட்டில் இருந்து அவரால் கிளம்ப முடியவில்லை. அவரும் லாக்காகிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் ஒரு அப்பாவும் மகளும் பிரஜின் வீட்டுக்கு வந்து அடைக்கலம் ஆகிறார்கள்.
இப்போது எதையாவது செய்து வீட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று ஷருமிஷாவும், அவரது காதலனும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மாப்பிள்ளையை கொலை செய்தாவது தப்பிக்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டிற்குள் வந்திருக்கும் அப்பாவும் மகளும்கூட ஒன்று சேர்ந்து அந்த மாப்பிள்ளைக்காரனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
பிரஜின் தனது வீட்டில் வாட்ச்மேனுடன் இணைந்து ஏதோ ஒரு சதி திட்டத்தை பேசிக் கொண்டிருக்கிறார். அதை செயல்படுத்த நினைக்கிறார்.
இப்படி ஆளாளுக்கு ஒரு திட்டத்தோடு அன்றைய இரவை கடக்க முயல்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? ஷருமிஷா யாரை கல்யாணம் செய்தார்? மாப்பிள்ளைகாரனை கொலை செய்தார்களா? இல்லையா? இதில் பிரஜினின் பங்கு என்ன என்பதெல்லாம் சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த இந்தப் படத்தின் திரைக்கதை
இந்தப் படத்தில் பிரஜின் ஹீரோவா.. வில்லனா.. என்கின்ற கேள்வி எழுவது போல திரைக்கதையை சஸ்பென்சாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர். இதனாலேயே சில காட்சிகளில் பிரஜின் என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? என்பது நமக்கு புரியாமல் போக, அவரது நடிப்பை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து போக முடியவில்லை.
நாயகி ஷருமிஷா ஒரு குழந்தைத்தனமான முகத்துடன் படம் முழுவதும் வலம் பெறுகிறார். ஆனால், நிறைய காட்சிகளில் அழுது கொண்டே இருப்பதால் இந்த அழகான முகம் இப்படி அழுகலாமா என்ற ஒரு பரிதாப உணர்வு நமக்கு வருகிறது. இயக்குநருக்கு அது இல்லை போலும்!.
வில்லனாக நடித்திருக்கும் கணேஷ் சாரபட்டின் தோற்றமே வில்லத்தனமாக இருப்பதால் தன்னுடைய வில்லத்தனத்தை எளிதாக செய்திருக்கிறார். முரட்டுத்தனமான ஒரு நடிப்பை காட்டி தான் வில்லன்தான் என்பதை நிரூபித்தும் இருக்கிறார்.
பிரஜின் மனைவியாக நடித்த நியா வர்கீஸ், அழகுப் பதுமையாக காட்சியளித்தவர், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிரஜினிடம் “இந்த கல்யாணம் வேண்டாமே?” என்று சொல்லி திரைக்கதையில் ஒரு டைவர்ட் கொடுத்திருக்கிறார்.
மேலும் ஷருமிஷாவின் காதலனாக நடித்த ராஜ்குமார், ரம் பிரபா, தென்றல் ராஜா என்று சிறிய நடிகர் பட்டாளமும் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களும் தங்களால் முடிந்த நடிப்பையே காண்பித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் இந்தப் படம் பட்ஜெட் படம் என்பதை சொல்லாமல் செல்வது போல காட்சிகளை படமாக்கி இருக்கிறார். ஒரே வீட்டுக்குள் நடக்கின்ற பல காட்சிகளிலும் கேமரா கோணங்களை மாற்றி மாற்றி வைத்து கொஞ்சமும் போரடிக்காமல் பார்த்து செய்திருக்கிறார்.
படத்தின் எடிட்டரான ராம்நாத் இந்தப் படத்துக்கு இத்தனை நிமிடங்களே போதும் என்று சொல்லி அழகாக வடிவத்தில் படத்தை கத்தரித்துக் கொடுத்திருக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ராம் பிரபா ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை… அதுவும் ஒரே ஒரு வீட்டுக்குள் நடக்கின்ற கதையாக வைத்து ஒரு புதிய முயற்சியை செய்து காட்டி இருக்கிறார்.
ஆனால், அவருடைய ஸ்கிரிப்ட் திறனும் இயக்குநர் திறனும் கொஞ்சமாகவே படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் படத்தின் இறுதியில் வரும் சில டிவிஸ்டுகள் இந்தப் படத்தை காப்பாற்றி இருக்கின்றன என்று சொல்லலாம்.