கலகலப்பான” கட்டா குஸ்தி-2

பாரதிராஜாவின் மறைவைப் போலவே பாக்யராஜின் மறைவும் தமிழ் சினிமா உலகிலும் வெகு மக்களிடமும் வருத்தத்தை உருவாக்கிச் சென்றிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு ‘பாக்யராஜின் பள்ளிக் கூட’த்தில் பாடம் படிக்காமலேயே அவரது பாணித் திரைக்கதையைக் கொண்டு ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குப் படம் தரமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். உண்மையில் பாக்யராஜ் தன் திரைக்கதை வழியே உருவாக்கும் திரையரங்க தருணங்கள் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று பார்க்கலாமா?

மல்யுத்த விளையாட்டைச் சிறு வயதிலிருந்தே விரும்புகிறாள் கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி). ‘அது பெண்களின் விளையாட்டு அல்ல’ என்று கூறி அவளை மடைமாற்ற முயல்கிறார் அவளுடைய அப்பா. ஆனால் அவருக்குத் தெரியாமல் அக்கலையில் நுணுக்கமான உத்திகளைக் கற்று  ஒரு வலுவான வீராங்கனையாக உருவாகிறாள். ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு வாழ்கிறாள். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவளை வீராவுக்கு (விஷ்ணு விஷால்) திருமணம் முடிக்கின்றனர். மனைவியை அடக்கி ஆள நினைக்கும் ஆண் மைய மனங்கொண்ட வீராவிடமும் தன் ’குஸ்தி’த் திறமையை மறைக்க முயல, ஓர் எதிர்பாராத சூழ்நிலையில் தன் மனைவி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பது தெரியவர, அது அவனுக்குப்  பெரிய அதிர்ச்சியைத் தரும். அதன்பின் வீரா – கீர்த்தி இடையே வெடிக்கும் ஈகோ, குடும்ப யுத்தமாக மாறி அது அவர்கள் இருவரையும் ஒரு மல்யுத்தப் போட்டியில் கொண்டுவந்து நிறுத்தும். அந்தப் போட்டியில் வீரா மனைவிக்காக விட்டுக்கொடுத்து தோற்பான். அதற்கு ஒரு ‘செண்டிமெண்ட்’ காரணத்தை வைத்திருப்பார் இயக்குநர். ஆனால், முதல் பாகத்தின் முடிவில் தன் மனைவி கீர்த்தியைத் தேசியப் போட்டிகளுக்குத் தயார் செய்து அழைத்துச் செல்வதாக அவளுக்கு வாக்குக் கொடுப்பதுடன் படம் முடியும். ஆணவத்தை விடப்  பரஸ்பர விட்டுக்கொடுத்தலுடன் கூடிய அன்பும், ஒருவரின் தனித் திறமையை மற்றவர் மதிப்பதும் தான் திருமண வாழ்க்கையின் நெகிழ்வான அம்சம் என்பதை நாயகனும் நாயகியும் உணர்வதோடு, பார்வையாளர்களுக்கும் அதைத் தன் நகைச்சுவை, பொழுதுபோக்கு, செண்ட்டிமெண்ட் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் உணரவைத்த காரணத்தால் முதல் பாகம் (2022) வெற்றியடைந்தது.
நான்கு வருடம் கடந்து இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. வெற்றிபெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகங்களில் பெரும்பாலும் முதல் பாகத்தை முந்திச் செல்லும் அளவுக்கு ‘சரக்கு’ இல்லாமல் போய்விடுவதால் அதிகமாகத் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. ஆனால்
 ‘கட்டா குஸ்தி 2’ அதை மாற்றிக் காட்டிவிட்டது. காரணம் திரைக்கதை.
மனைவியை தேசியப் போட்டிகளுக்கு  வீராங்கனையாக மாற்றுவதற்காக இம்முறை நாயகன் வீரா, சுவையாகச் சமைத்து, வீட்டைப் பெருக்கி, துடைத்து, துணி துவைத்து, 6 வயது மகளைப் பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டு, அழைத்து வந்து, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த வேலையில் ரயில்வேயில் பணி புரியும் மனைவியைத் தினசரி கோச்சிங் அழைத்துச் சென்று என பொறுப்பான ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக
இருக்கிறான்.
கீர்த்தி, மாநில அளவில் மல்யுத்த விளையாட்டின் முகமாக இருக்கிறாள். தேசியப் போட்டிக்குத் தேர்வாகும் கடைசிக் கட்ட செலக்‌ஷனுக்காக காத்திருக்கும் சமயத்தில் மனைவியின் ‘செலக்‌ஷன் தோல்வி’க்கு காரணமாகிவிடுகிறான் வீரா.  மீண்டும் தன்னுடைய ஆணாதிக்க ஈகோ முகத்தை வீரா காட்டிவிட்டதாக நினைக்கிறாள் கீர்த்தி. விளைவாக, விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறாள். அங்கே உடனடியாகத் தீர்வு கிடைக்காது என்கிற நிலையில், வீராவிடமிருந்து விவாகரத்துப் பெற்று மகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல பொது இடத்தில் நடத்தப்படும் மல்யுத்தப் போட்டியில் கணவனுடன் களம் காணத் தயாராகிறாள். போட்டி நடந்ததா, கீர்த்திக்கு விவாகரத்து கிடைத்ததா என்பது கதை.
திரைக்கதையின் முதல் ஈர்ப்பான அம்சம் ‘கேரக்டர் ரிவர்சல்’. வீரா குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதும் கீர்த்தி மல்யுத்தக் கனவைத் துரத்துவதுமான கதாபாத்திர வார்ப்பில், முதல் பாகத்தைவிடக் கணவன் – மனைவி இடையேயான உறவு மற்றும் பொறுப்புகளைஇடம்மாற்றிக்
கொண்டது நகைச்சுவை வழிந்தோடும் கலகலப்பான காட்சிகள் வழியாகச் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டுள்ளது.
மாநகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீராவும் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கருணாகரனும் எதிரெதிர் வீடுகளில் குடியிருக்கிறார்கள். மனைவி மீது மிகுந்த ‘பொசசிவ்’ கணவனாக இருக்கும் கருணாகரன், வீராவின் மீது வன்மத்துடன் அவர் செய்யும் வீட்டு வேலைகளையெல்லாம் ‘ரீல்ஸ்’களாக தன் கைபேசிக் கேமராவில் வீடியோ செய்து பதிவேற்றுகிறார். இவருக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று யோசித்தால், அதைத் திரைக்கதையில் சரியான இடத்தில் மதிப்பு மிக்கதாக மாற்றிவிடுகிறார் செல்லா அய்யாவு.
அதேபோல், வீராவின் மகள் படிக்கும் பள்ளியில் அவளுடைய வகுப்பாசிரியை ‘மீனு மிஸ்’ – வீரா இடையிலான கபடமற்ற நட்பைத் திரைக்கதையின் ஒரு பகுதியைச்  ‘சூடாக்க’ பயன்படுத்திக்கொண்ட விதம், சரியான பாக்யராஜ் தனம். வீராவின் மகளுக்குள் இருக்கும் நடனத் திறமையைக் கண்டறிந்து, அவள், பள்ளி ஆண்டு விழாவில் ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற ‘அப்படிப் போடு ’ பாடலை சக சிறார்களுடன் இனைந்து ஆடுவதற்கு மீனு மிஸ் பயிற்றுவிக்கிறார். இக்காட்சியின் முடிவில் கீர்த்தியின் கோபம் வழியாக, வளரும் குழந்தைகளிடம் யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ, அதை அறிந்து ஊக்குவிக்க வேண்டியது பெற்றோர்தான் என்கிற செய்தியை பாடம் நடத்தாமல் ஜனரஞ்சகமாகச் சொல்கிறார் இயக்குநர்.
அதேநேரம், அந்த ‘கில்லி’ பாடலை, படம் கிளைமாக்ஸ் நோக்கி விரையும் இறுதிக்கட்டத்தில், மிகவும் உணர்ச்சிகரமான திருப்பத்துக்காக காத்திருக்கும்போது இயக்குநர் பயன்படுத்திய விதத்தைப் பார்த்து மொத்தத் திரையரங்கும் பெரும் அமளிக்கு உள்ளாகிறது.
படத்தின் மைய முரண், கணவன் – மனைவி இடையிலான பிளவு. அப்பிரச்சினை தீவிரம் கொள்ளும் புள்ளியான, வீரா எவ்வாறு மனைவியின் சறுக்கலுக்குக் காரணமாகிறான் என்பதைச் சித்தரித்த விதம் பலவீனமாக இருந்தாலும் பார்க்கும் விதமாகச் செய்துவிடுகிறது இயக்கம் பொதுவெளியில் ஆசிரியராக  மதிக்கப்படும் ஓர் ஆண், வீட்டில், சொந்த உறவால் பெருத்த அவமானத்துக்கு உள்ளாகும்போது அவன் மனமும் குணமும் எவ்வாறு பாழ்பட்டுப் போகின்றன என்பதையும் அதன் ‘பட்டர்பிளை எஃபெக்ட்’ வீரா – கீர்த்தி வாழ்க்கையில் எப்படி ‘வில்ல’த்தனத்துடன் வெளிப்படுகிறது என்பதையும் சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் பாகத்தில் கூடுதல் அம்சமாக, இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களையும் சேர்த்திருக்கிறார். வீரா – கீர்த்தி தம்பதியின் 6 வயது மகள் வழியாக ‘பேரண்டிங்’ என்பது பெற்றோரை மட்டும் சார்ந்ததல்ல, அவர்களது குழந்தைகளின் உணர்வையும் அது அதிகம் சார்ந்திருக்கிறது,  பிள்ளைகளைச் சரியான அலைவரிசையைப் புரிந்துகொண்டு பெற்றோர் அவர்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை ‘க்யூட்’டான குழந்தை – பெற்றோர் பிணைப்புக் காட்சிகள் வழியாக விவரித்துச் செல்கிறது படம்.
அந்த இரண்டாவது முக்கியக் கதாபாத்திரம், கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் வீராவின் அத்தை. வாழ்க்கையைச் சரிபாதியாகப் பகிர்ந்து கொண்டு வாழும் பெண்ணை வெறும் ஜடமாகப் பார்க்கும் கருணாஸ் ஏற்ற கதாபாத்திரத்தின் குணத்தைக் கொண்டவர்களுக்குச் சரியான ‘ கிராமத்து வைத்தியம்’ செய்திருக்கிறார் இயக்குநர்.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி அவர்களுடைய 6 வயது மகளாக நடித்திருக்கும் ஷோரா ஸையானா ஆகிய மூவரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள்.
கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், கருணாகரன், அவருடைய மனைவியாக வருபவர், கீர்த்தியின் பயிற்சியாளர், ஆயுர்வேத மருத்துவர், மீனு மிஸ் ஆக வரும் மோக்‌ஷா, நீதிபதியாக வரும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் திரைக்கதைக்குள் ஜெல்லிபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். முழுநீளக் குணச்சித்திர கதாபாத்திரங்களில் வந்து போர் அடிப்பதைவிட, இதில் மல்யுத்தப் போட்டியின் நடுவராக வரும் யோகிபாபு உருவாக்கும் ‘இம்பேக்ட்’ ரகளையான கிளைமாக்ஸ் காட்சிக்கு வலு கூட்டியிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையிலும் கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவிலும் பழுதில்லை. பல இடங்கள் எளிதாக  யூகித்துவிடும் திருப்பங்களைக் கொண்டிருந்தாலும்  சில இடங்களில் இடங்களில் லாஜிக்குகளை மேஜிக்குகளாக மாற்றிவிடுகிறது செல்ல அய்யாவின் இயக்கம். அதற்கு கே.எம்.பாஸ்கரனின் படத் தொகுப்பு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
முதல் பாகத்தில் முட்டிக்கொண்ட மல்யுத்தத் தம்பதி, இரண்டாம் பாகத்தில் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும்போது எதிர்படும்
பிரிவுச் சிக்கலை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை நோக்கி நகரும் திரைக்கதையைக் கலகலப்பும் செண்டிமெண்டும் வாழ்க்கையின் வலியிலிருந்து முளைக்கும் வில்லத்தனமும் என பாக்யராஜ் ஸ்டைலில் நிறைவான திரையரங்கத் தருணங்களோடு குஸ்தியை ஒரு கொண்டாட்டமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அந்த அளவில் இயக்குநர் செல்லா அய்யாவுவை ‘பாக்யாராஜ் 2.0’ எனப் பாராட்டலாம்.
#ஆர்.சி.ஜெயந்தன் முகநூல் பதிவு