‘ உண்மை சம்பவத்தில் உருவான’ அன்பில் அவன்’ விளம்பர நிகழ்வு தொகுப்பு
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.
இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,
“இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான் . கதை பிடித்துப் போய் தான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தோம். அந்த அளவுக்குத் தரமாக இருந்தது. பிறகு நல்லதொரு ஒரு புத்திசாலித்தனமான குழுவினர் அமைந்தார்கள். கனவுப் படம் போலவே இந்தப் படக்குழுவையும் கனவுப் படக்குழு என்று கூறலாம் .
என் தம்பிக்கும் எனக்கும் எப்போதும் நல்ல ஒரு நல்லிணக்கம் இருக்கும். நான் தான் அதிகமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். செய்து கொண்டிருப்பேன். நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம் .எந்த விஷயத்திலாவது எனக்குச் சந்தேகம் வந்தால் தம்பி தான் ஓகே சொல்வார் .அசோக் நடித்திருக்கும் கதை, பாத்திரங்களை வைத்து அவர் சீரியஸான ஆள் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எப்போதும் பேசி சிரித்துக் கொண்டே இருப்போம். நான் எதையும் இரண்டு முறை சொன்னால் அவர் கேட்டுக் கொள்வார் .நானும் அப்படித்தான். அசோக் எனது சகோதரன் மட்டுமல்ல நல்ல நண்பனும் கூட. ’அன்பில் அவன்’ படத்தின் கதை அன்புள்ள தம்பதிகள் சிக்கலிலிருந்து எப்படி போராடி மீள்கிறார்கள் என்பதுதான். நமக்கு இப்படி ஒருவர் கணவராகக் கிடைக்க மாட்டாரா என்று நிறைய பேர் ஆசைப்படும்படியாக அந்தப் பாத்திரம் இருக்கும்”என்றார்.
கதாசிரியரும் ‘ போர் தொழில்’ இயக்குநருமான விக்னேஷ் ராஜா பேசும்போது ,
” ஓர் எழுத்தாளராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் கார்ப்பரேட் பிலிம்ஸ் படங்கள் எடுத்திருக்கிறேன் .அந்த சமயத்தில் நாங்கள் வட இந்தியாவில் ஜெய்ப்பூர் பக்கம் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது நல்ல மழை பெய்தது. காரின் மேல் உள்ள சாதனங்கள் எல்லாம் நனைந்து விடப் போகிறது என்று அந்த இன்னோவா காரை ஓரம் கட்டி விட்டு அருகில் கிடைத்த பிளக்ஸ் பேனரை உடைத்து வைத்துக் கட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தோம். அந்த பிளக்ஸ் பேனரில் இருந்தது யார் என்று நாங்கள் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டோம். அதுதான் இந்தக் கதையின் முதல் விதை. இது ஒரு காதல் கதை. கனவு கண்ட வாழ்க்கை வாழ நினைக்கும் தம்பதியினர் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதை.
அபிநயா, அசோக் செல்வன் என்று வந்து பிறகு கார்த்திக் வந்தார். நான் கற்பனை செய்ததை விடப் படம் பிரமாதமாக வந்திருக்கிறது. அசோக் செல்வன் எனக்கு 15 ஆண்டுகாலப் பழக்கம். அப்போது நாங்கள் ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் பார்த்துவிட்டு அதைப்போல பேசிப் பார்ப்போம். எனது முதல் படத்தில் முதல் கதாநாயகன் அவர்தான். இப்போது குடும்பம் போல் ஆகி இருக்கிறோம். நானும் அவரும் தெருத்தெருவாக ஓடி அலைந்திருக்கிறோம்.அவரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்றார்.
இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசும்போது,
“நான் படம் பற்றிப் பேச ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் படம் நன்றாக இருக்கிறது .நம்பிக்கை இருக்கிறது. தணிக்கைத் துறையினர் தொடங்கித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி நிறுவனத்தினர் வரை எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள் .அடுத்து படத்தை உங்களுக்கு எப்போது காட்டுவது என்று ஆசையாக இருக்கிறோம்
அசோக் செல்வனை எனக்குப் பத்து வருடங்களாகத் தெரியும். 2017 முதல் பலமுறை படங்கள் தொடங்கி தொடங்கி நின்று தொடர முடியாமல் போயிருக்கிறது.ஒரு படத்தில் தயாரிப்பாளர் எங்களை வேண்டாம் என்றால் இன்னொரு படத்தில் நாங்கள் இந்தத் தயாரிப்பாளர் வேண்டாம் என்போம்.ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்து 13 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது வரை பல்வேறு முயற்சி அனுபவங்கள் உண்டு.
அசோக் செல்வன், அபிநயா இவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது . ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதை நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறார்கள். நல்ல கதையோடு வாருங்கள். அசோக்செல்வன் கதையைத் தேர்வு செய்வதில் தெகிடி முதல் அவரது திறமையைக் காணலாம்.
அவர் எனது படத்தில் ஒரு உதவி இயக்குநரைப் போல ஈடுபாடு காட்டினார். விளம்பர விஷயங்களில் கூட அவரது உதவி பெரிது. படத்தைச் சரியாகச் செய்ததாக மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஹாப்பி ஹை நிறுவனம் இன்னும் மேலே உயர்ந்து வளர்ந்து வர வேண்டும். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள் .திறமையானவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். நல்ல ஒரு திறமையான குழுவினரை வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு யோசனை சொன்னால் திரும்பி பத்து யோசனைகளாகத் தரும் அளவிற்கு இருக்கிறார்கள்.இந்தப் படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் காட்டிய ஈடுபாடு சாதாரணமானதல்ல. அவர் பார்ப்பதற்குத் தான் குழந்தை போல இருப்பார் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் எல்லாம் தாண்டி விடுவார். இந்தப் படத்தில் கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம் என்று கூறலாம். அவருக்குத் தனிப்பட்ட முறையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் 40 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து இந்தப் படத்திற்காகப் பணியாற்றினார்.
படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும்போது,
நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல. சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் தான் நான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம்.ஏதோ ஒரு முயற்சி செய்ய வேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.
இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார்.பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பலரும் மாறி விடுவார்கள் .ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார். அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.
இயக்குநரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம்.என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
விக்னேஷ் ராஜா தனுஷ் படத்திலும் அஸ்வத், ரஜினி சார் படத்திலும் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு பேரும் வளர வாழ்த்துக்கள்.இங்கே வந்திருக்கும் கௌதம் கார்த்திக் என் தம்பி. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .எடிட்டர் செல்வாவும் நானும் கல்லூரிக் காலத்திலிருந்து நண்பர்கள். அவர் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்
பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது அவர் தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது.ஆனால் அவர் சிறந்த வகையில் உருவாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கௌதம் நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம்.
சபு சேட்டன் எங்களுக்கு படப்பிடிப்பில் பிரட் சப்ளை செய்தார். அங்கே ஒரு ஸ்டாலே போட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்தார். நான் நூறு இருநூறு ஆடிஷன் போயிருப்பேன்.இந்தப் படத்திலும் அப்படி ஆடிஷன் வைத்து தான் தேர்ந்தெடுத்தோம் .அப்படி ஒரு தங்கம் போல மகா, கதிர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம் .அவர்கள் பெரிய இடத்துக்கு செல்வார்கள்.
நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும்.
இந்தப் படத்தில் ஐங்கரன் இண்டர் நேஷனல் இணைந்த போது கருணாமூர்த்தி சார் ஒன்று கூறினார். அவர் கதையை மட்டும் கேட்டார். மற்றபடி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. எனது மனைவி கீர்த்திக்கு நன்றி.”என்றார்.
நிறைவாக ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பாளர் அபிநயா அனைவருக்கும் நன்றி கூறினார்.