தமிழ்சினிமாவில் மீண்டும் ஆர்.டி.ராஜா

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ரெமோ,மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன்,பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான சீமராஜா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நிழலாக தமிழ்சினிமாவில் பார்க்கப்பட்டவர். இவர் தயாரித்த திரைப்படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொடர்ந்து படங்களை தயாரிக்க இயலவில்லை. சிவகார்த்திகேயனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.அதற்குப் பின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒதுங்கியிருந்த அவர்,தற்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

 அவரது பிறந்தநாளை யெட்டி அவர் வெளியிட்ட பதிவில்….

அனைவருக்கும் அன்பு வணக்கம்..!

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

8 ஆண்டுகளுக்கு பிறகு என் பிறந்த நாளில்,புதிதாய் பிறந்து,இயற்கையையும்,குல தெய்வங்களையும் வணங்கி, உண்மையையும், உழைப்பையும் நம்பி மீண்டும் களத்திற்கு வருகிறேன்.

அதே களம் – ஆனால் இம்முறை வியூகம் வேறு.ஆடப்போகும் ஆட்டமும் வேறு.வேகமும்,விவேகமும் இன்னும் கூடுதலாய் இருக்கும்.

வெற்றியே கடவுள்.(SUCCESS IS GOD)
வெற்றி நிச்சயம்.

இங்கு அடிப்படையில் மாற்றம் வேண்டும்.சொல்லில் அல்ல..செயலில்..

நாம் மாற்றத்தை நோக்கி உறுதியாய் அடியெடுத்து வைப்போம்.மாற்றுவோம்.

பல்வேறு புதிய படைப்புகளில் இணைந்துள்ளேன்.இன்று காலை 10:00 மணிக்கு முதல் முக்கிய அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதன்படி பத்து மணிக்கு வெளியான அறிவிப்பு…

33 வருட அனுபவம் மிக்க,இந்தியாவின் முன்னணி கலை இயக்குநர்களில் ஒருவரும், எனது அன்பு நண்பருமான டி.முத்துராஜ் அவர்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுப்பதை அறிவிப்பதில் மெருமகிழ்ச்சி அடைகிறேன்.அவர்,தனது முதல் முயற்சியாக,தனது கனவுப்படமான ஹைப்பர்-ரியலிஸ்டிக் டிஜிட்டல்-ஹைப்ரிட் திரைப்படத்தை இயக்குகிறார்.மாபெரும் பொருட்செலவில் உலகத்தரத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை தனது புதிய தயாரிப்பு நிறுவனமான மந்திரா ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார்.

டி.முத்துராஜ் அவர்களால்,கடந்த ஏழு ஆண்டுகளாக, ஆழமான ஆய்வு, திட்டமிடல் மற்றும் தயாரிப்பின் மூலம் வடிவமைக்கப்பட்ட,அவரது உலகளாவிய இலட்சியப்பயணத்தில்,அவரது கனவை நனவாக்க,அவருடன் இணைந்து தோள் கொடுப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

மந்திரா ஸ்டுடியோஸ் என்பது வெறும் தயாரிப்பு நிறுவனம் மட்டும் அல்ல.அது புதிய சிந்தனைகளுக்கும்,மரபுகளை மீறும் கதைசொல்லிகளுக்கும்,எல்லைகளுக்கு அப்பால் கற்பனை செய்யத் துணியும் படைப்பாளிகளுக்கும்,தங்கள் கனவுகளை நனவாக்க உருவாக்கப்பட்ட நிறுவனம்.வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல,துணிச்சலான சிந்தனைகளை ஊக்குவிப்பதும்,மிகப் பெரியதாகவும், வழக்கத்திற்கு மாறானதாகவும், சில நேரங்களில் சாத்தியமற்றதாகவும் தோன்றும் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நம் கற்பனைக்கு எட்டாத,ஏற்கனவே உள்ள வரம்புகளை மீறி,சவால்களை எதிர்த்து நிற்கும் சுதந்திரத்தை படைப்பாளிகளுக்கு வழங்கும்போதுதான்,சினிமா அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.என் நம்பிக்கைக்கு,நம்பிக்கையளிக்கும் விதமாக மந்திரா ஸ்டுடியோஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சிந்தனை,சவால் மிக்கதாக இருந்தால்,உரையாடல் முடியாது என்று தொடங்காமல்,முடியும் என்று மட்டுமே தொடங்கவேண்டும்.

மந்திரா ஸ்டுடியோஸ் உருவாக்கப் போகும் புதிய கதைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் அளவற்ற சாத்தியமில்லா சாத்தியங்களை ஆவலுடன் எதிர்நோக்குங்கள்.

டி.முத்துராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.மிகமுக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.