ஜெயிலர் 2- திரைப்பட விமர்சனம்

கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’ அந்த படத்தின் தொடர்ச்சியாக, வெளியாகி இருக்கிறது ‘ஜெயிலர் 2.

சிலை கடத்தலை மையமாக கொண்டு அதில் ரஜினிகாந்த ஃபார்முலாவை கலந்து உருவாக்கப்பட்ட முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகம் தக்க வைக்குமா? தாண்டி செல்லுமா என்கிற யூகங்கள் விவாத பொருளாகி வந்த சூழலில் அக்டோபர் 10 ஆம் தேதி போட்டி படங்கள் எதுவுமின்றி தனியாக வெளியாகி உள்ளது ஜெயிலர்2

ஜெயிலர் படத்தின்இறுதியில் தனது மகனை கொன்றபிறகு ஒரு மலைக் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்). அங்கு இருக்கும் நகராட்சி அதிகாரியுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதல், அவரை பழக்கடை நடத்தும் மூர்த்தி என்பவரிடம் கார் ஓட்டுநராக கொண்டு சேர்க்கிறது.

முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மனின் மரணத்துக்கு பழிவாங்க அவரது கூட்டாளி திலீப்பும் (சுராஜ் வெஞ்சர மூடு), அவர்களுக்கு மேலிருக்கும் மாஃபியா கும்பல் தலைவர் போதி கல்பக்கும் (எஸ்.ஜே.சூர்யா) வெறியோடு ரஜினிகாந்த்தை தேடி அலைகின்றனர்.

வர்மனைக் கொன்றது யார் என்று தேடி வரும் இந்த கும்பலின் பார்வை, இறுதியில் முத்துவேல் பாண்டியன் மீது விழுகிறது. தான் ஒதுங்கி வாழ நினைத்த வன்முறை உலகத்துக்குள் மீண்டும் இழுக்கப்படும் முத்துவேல் பாண்டியன், இந்தச் சிலை கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக எப்படி முடித்துக்கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.

 ‘கபாலி’ (2016படத்துக்குப் பிறகு ரஜினிக்கான வெகுஜன ஈர்ப்பு முற்றிலும் மாறிவிட்டது. அதை  புரிந்துகொண்ட நெல்சன், தன் வழக்கமான டார்க் நகைச்சுவையையும், ரஜினிகாந்தின் அதிரடி மாஸ் பிம்பத்தையும் கச்சிதமாக இணைத்துள்ளார்.

படத்தின் முதல் பாதி முழுக்கவே நெல்சனின் அடையாளமான நகைச்சுவையோடு நகர்கிறது. யோகி பாபு, ’நாடோடிகள்’ நமோ நாராயணா தொடர்பான நகைச்சுவை காட்சிகள்  கைகொடுத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் சுராஜ் வெஞ்சரமூடு – ரஜினிகாந்த் இடையிலான ஆடு புலி ஆட்டத்தை வைத்து இரண்டாம் பாதிக்கான மோதலை நிதானமாக உருவாக்கி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் கதை கோவாவுக்கு நகரும்போது காமெடி குறைந்து ஆக்‌ஷன் காட்சிகள்  உக்கிரமடைகின்றன. கூடவே ஒரு முக்கியமான தருணத்தில் வரும் எமோஷனல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன்,மிர்ணா, சிறுவன் ஆத்விக் உடைய நடிப்பும் வெகு சிறப்பு. முதல் பாகத்தில் இறுதியில் நடக்கும் சம்பவத்தை கொண்டு அந்த எமோஷனல் கோணத்தை நெல்சன் மிக அழகாகக் கையாண்டுள்ளார்.

75 வயதிலும் தனது கம்பீரமான ஸ்டைல், அதே நேரம் யோகி பாபு, நமோ நாராயணா உடன் சேர்ந்து அவர்களுக்கு இணையாக காமெடி என  திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் ரஜினிகாந்த்.

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு  காமெடி கலந்த வில்லத்தனத்தில் அசத்துகிறார். வழக்கம்போல தனது வித்தியாசமான மேனரிசத்தால் எஸ்.ஜே.சூர்யா கவனம் ஈர்க்கிறார்.

நடிகை வித்யா பாலனுக்கு வலுவான கதாபாத்திரம்.  ஸ்டைலாக சிகரெட் ஊதிக் கொண்டே ரஜினிகாந்த்தை மிரட்டும் காட்சியில் ஈர்க்கிறார்.
முந்தைய பாகத்தைப் போலவே கதைக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ ஏராளமான கேமியோக்களைஇறக்கி இருக்கிறார்கள்.

அனிருத் படத்தின் உயிர்நாடியாக செயல்பட்டிருக்கிறார். பாடல்கள் முந்தைய படத்தைப் போல பெரிதும் ஈர்க்கவில்லை என்றாலும், ‘ஒன் சன் ஒன் மூன்’ மற்றும் ‘ஹுக்கும்’ பின்னணி இசையின் மூலம் ரஜினியின் மாஸ் காட்சிகளை பக்காவாக எலவேட் செய்து அசத்துகிறார்.

படத்தில் லாஜிக் என்பது துளியளவு கூட.. இல்லை, அதிலும் இரண்டாம் பாதியை எல்லாம் மூளையை கழட்டி வைத்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்கிற நிலை.

ரஜினிகாந்த தன் பங்குக்கு ஒரு 500 பேர், எஸ்.ஜே.சூர்யா தன் பங்குக்கு ஒரு 500 பேர் என கொன்று குவிக்கிறார்கள். ஆனால் போலீஸ் என்ற ஓர் இனம் இருப்பதற்கான அறிகுறியே படத்தில் இல்லை. ஆங்காங்கே சும்மா உப்புக்கு சப்பானி போல வந்து செல்கிறார்கள். அதிலும் கேமியோவாக வரும் ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை கொண்டு வந்து உடைத்து இன்னொரு பக்கமாக வெளியேறிச் செல்கிறார்.

முத்துவேல் பாண்டியனுக்கு தோல்வியே கிடையாதா? ஹீரோவுக்கு ஏதேனும் பெரிய சிக்கல் வந்து அதை அவர் கஷ்டப்பட்டு தீர்ப்பதுதானே திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்? ஆனால், ஏதேனும் ஒரு சிக்கல் வந்தாலும் அதை அடுத்த நிமிடமே தன்னுடைய பராக்கிரமத்தால் முறியடித்து விடுகிறார். அப்படி எத்தனை பேருக்கு தான் அவர் ஜெயிலராக இருந்தபோது உதவி செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. முந்தைய பாகத்தை விட இதில் லிஸ்ட் இன்னும் பெரிதாகி இருக்கிறது.

இதுபோன்ற லாஜிக் ஓட்டைகள் அநேகம் இருந்தாலும் ரஜினிகாந்த் என்ற மாயாஜாலத்தின் முன் அவை மறக்கப்படிப்படுகின்றன. வயது முதிர்வின் காரணமாக ரஜினிகாந்த் முந்தைய காலங்களைப் போல அதிரடியாக சண்டை போடவோ, நடனமாடவோ முடியாது என்பதை உணர்ந்து, அவரது பலவீனத்தை புரிந்து வைத்து நெல்சன் ஒரு பொழுதுபோக்கு மசாலா விருந்தை படைத்துள்ளார்.

மூன்றாம் பாகத்துக்கான குறியீட்டுடன் படம் முடிகிறது. சில சுணக்கங்கள் இருந்தாலும், தியேட்டரில் கொண்டாட்டத்துக்கான எந்தக் குறையும் வைக்காத ஒரு பக்காவான இரண்டாம் பாகமாக வந்துள்ளது  ‘ஜெயிலர் 2’.