‘வாய்ப்பு கொடுத்திருந்தால்’ மனம் திறந்த ‘ ரீல்ஸ் அக்கா ஆர்னிகா’
காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில்’லவ் 3 ஓ’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார்.
நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ‘கோயம்புத்தூர் மாப்ள’, ‘கே என் ஸ்மைலி’ எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத் தொகுப்பு செய்துள்ளார்.மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் 28.10.2626 ஆம் தேதி நடைபெற்றது இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ரீல்ஸ் அக்கா ஆர்னிகா தமிழ்சினிமாவின் மறுபக்கத்தை, அதனால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை தயக்கமின்றி பதிவு செய்தார்
“நீங்கள் மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வாருங்கள். அதன் பிறகு ஒரு போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்றார்கள்.
அப்படி நான் அறுவை சிகிச்சை செய்திருந்தால்? ஒரு குறும் படத்திற்குக்கூட நான் இரண்டு ஆண்டுகள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். அந்த குறும்பட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் தாமதமாக முடிக்காமல் முன்பே கொடுத்திருந்தால்?
ஒரு கண்டன்ட் வீடியோவிற்குச் சின்ன வசனம் பேசுவதற்குக்கூட நான் நாலு மணி நேரம் செலவிடுவேன்.
அவர்கள் நல்லதொரு கண்டன்ட் இருக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால்? நான் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால்? பல முறை தேடிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு திரைப்படத்தில் ஒரு துணைநடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்?
இன்று ‘லவ் 3. ஓ’ என்கிற படத்தில் நான் கதாசிரியராக, பாடல் ஆசிரியராக, உடையலங்கார நிபுணராக, கலை இயக்குநராக, இணைத் தயாரிப்பாளராக, கதாநாயகியாக, இயக்குநராக உருவாகி இருக்க மாட்டேன்.
இவை எல்லாவற்றிற்கும் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அன்று நான் வாய்ப்பு தேடி அலைந்தபோது வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி.
நமது வாழ்க்கையில் எதிர்மறையாக ஒன்று நடக்கிறது என்றால், ஒன்று தாமதமாகிக் கொண்டே இருக்கிறது என்றால் ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் அது அப்படிச் செல்கிறது என்று சொல்வார்கள்.
நாம் வாய்ப்பு கேட்டுத்தானே பல படிகள் ஏறிக் கொண்டிருந்தோம், இன்று நான் ஒரு நடிகையாக ஒரு இயக்குநராக ஆகியிருக்கிறோம் என்கிறபோது இப்போது நினைத்துப் பார்த்தால் ஒன்று தோன்றுகிறது.
நமக்கு ஒன்று தேவைப்படுகிறது என்றால் நாம்தான் அதைச் செய்ய வேண்டும். வேறு யாரும் நமக்கு உதவி செய்ய வர மாட்டார்கள்.
நாம் ஒன்றை அடைவதற்கு நாம்தான் முயல வேண்டும்; போராட வேண்டும். அப்படி உங்களுக்கு எது வேண்டுமானாலும் நீங்கள்தான் போராட வேண்டும். யாரும் போராட வர மாட்டார்கள்.
இப்படிப் போராடி வந்து நான் நின்று இருக்கும் இந்த மேடையையே ஒரு வெற்றியாகத்தான் நினைக்கிறேன். கண்டிப்பாக மக்கள் ஆதரவு தருவார்கள்.
இந்தப் படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். போகப் போக அதைத் திருத்திக் கொள்கிறோம்.
எங்களது ரீல்ஸ்களைப் பார்த்துதான் மக்கள் இவ்வளவு தூரம் எங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்காமலா இருப்பார்கள்? கண்டிப்பாகச் செய்வார்கள்.
எங்களுடைய சிறந்ததைக் கூடுமானவரையில் நாங்கள் செய்திருக்கிறோம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களை சந்தோஷப்படுத்துவது போல ஒரு விஷயத்தை செய்திருக்கிறோம். அது கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் ஆதரவு கொடுங்கள்.
எனக்கு ஒரு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தால் வெளியில் இருக்கும் பல திறமைசாலிகளையும் உள்ளே கொண்டு வருவேன்.
நான் பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன். அதன் வலி எனக்குத் தெரியும். என்னைப் போல் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கு ஒரு சின்ன வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.