முருகதாஸ் நடத்தும் நாடகம்

போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தால் நஷ்டமடைந்ததாக விநியோகிஸ்தர்கள் புகார் கூறினர். இதுதொடர்பாக விநியோகிஸ்தர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து முறையிட முயன்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, நட்பின் அடிப்படையில் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு சென்ற விநியோகஸ்தர்கள் தர்பார் நஷ்டம் தொடர்பாக அவரிடம் முறையிட முயன்றனர்.

ஆனால், அவர்களை சந்திக்காத முருகதாஸ், தன் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்த காவலர்கள், விநியோகிஸ்தர்களை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இதனால் கடும் கோபமடைந்த விநியோகஸ்தர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென சென்னையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், ‘திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள் “ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று (பிப்ரவரி 6) மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “தர்பார் திரைப்படம் நஷ்டம் என்று கூறிவரும் விநியோகிஸ்தர்கள், அதற்கு இழப்பீடு வேண்டுமென்று என்னை மிரட்டி வருகின்றனர். இதுதொடர்பாக காவல் துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, பாதுகாப்பு வழங்க வேண்டுமென சென்னை மாநகர ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக விநியோகஸ்தர்கள் தரப்பிடம் பேசியபோது, “ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்கச் சென்றவர்கள் யாரும் புதிதாக திரைத்துறைக்குள் வந்தவர்கள் இல்லை. அங்கு சென்ற 9 பேரும் முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்கள். முருகதாஸ் இவர்களைத் தேடிச் சென்று சந்தித்த காலங்களும் உண்டு. தர்பார் திரைப்படத்தில் முருகதாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் 35 கோடி ரூபாய். விநியோகிஸ்தர்களுக்கு 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தர்பார் திரைப்பட பிரச்சினையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஏ.ஆர். முருகதாஸ் நடத்தும் நாடகம்தான் இது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றால் முதலில் தான் இருக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தால், அவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா இல்லையா என்று முடிவு செய்து பாதுகாப்பு அளித்திருப்பார்கள் அல்லவா? நேரடியாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்திருக்கிறார். அடுத்து கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். இது நாடகம்தானே” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏ.ஆர்.முருகதாஸ் மனு தொடர்பாக காவல் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.