பாலா இயக்கும் படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பாளர்

விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் என்ன என்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை.அடுத்து அவர் உதயநிதியை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் உதயநிதி மற்றும் அதர்வா ஆகிய இருவரையும் நாயகர்களாக வைத்துப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், உதயநிதி, அதர்வா, ஜீ.வி.பிரகாஷ் ஆகிய மூவரையும் நாயகர்களாக்கி அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இந்தப்படத்தைத் தயாரிப்பது யார்? என்கிற கேள்விக்கு விடை தெரியவில்லை. அதேநேரம், இப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் பாலாவே தயாரிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் முதன்முறையாக பாலா ஏ.ஆர்.ரகுமானுடன் இணையவிருக்கிறாராம். இதற்காக ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் பாலா.
அவரும் பாலாவோடு பணிபுரிய பெருமகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாராம் ஏ.ஆர்.ரகுமான். அதைத் தொடர்ந்து அவருக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரோடு இதுவரை பணியாற்றிவந்தார் பாலா.
இப்போது ஏ.ஆர்.ரகுமானோடு அவர் இணையவிருப்பதால் இப்படத்துக்கு தொடங்கும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.