தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத திரைப் பாடல்களை எழுதி சாகாவரம் பெற்றிருக்கும் ‘கவியரசர்’ கண்ணதாசன் குடும்பத்தில் இப்போது சொத்துப் பிரச்சினை எழுந்துள்ளது.
‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு பொன்னழகி என்னும் பொன்னம்மாள், பார்வதி, வள்ளியம்மை என்று மூன்று மனைவிகள்.
இவர்கள் மூலமாக ‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு 15 பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில் ரேவதி சண்முகம், விசாலாட்சி, அலமேலு, கலைச்செல்வி சொக்கலிங்கம், தேனம்மை, விசாலி கண்ணதாசன் என்ற மகள்களும், காந்தி கண்ணதாசன், கமல் கண்ணதாசன், கலைவாணன் கண்ணதாசன், கோபி கண்ணதாசன், சீனிவாசன் கண்ணதாசன், கண்மணி சுப்பு, ராமசாமி கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், வெங்கடாச்சலம் கண்ணதாசன் ஆகிய மகன்களும் உள்ளனர்.

இவர்களில் ஒருவரான கோபி கண்ணதாசன், “தனது குடும்பச் சொத்துக்களை தனது மற்றைய சகோதரர்களான காந்தி கண்ணதாசனும், அண்ணாதுரை கண்ணதாசனுமே அனுபவிக்கிறார்கள். கண்ணதாசனின் மற்றைய வாரிசுகளுக்கு உரிய பங்கினைக் கொடுப்பதில்லை” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
அவர் இது பற்றி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தையார் ‘கண்ணதாசன் புரொடெக்சன்ஸ்’, ’விசாலாட்சி பிலிம்ஸ்’, ’நேஷனல் பிக்சர்ஸ்’ உள்ளிட்ட 5 தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வந்தார். அவற்றின் மூலமாகத் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களும் இப்போதும் திரையரங்குகள், தொலைக்காட்சிகள், மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
ஆனால், இதற்கான ராயல்டி தொகை பெருமளவில் வந்தும்கூட கடந்த 45 ஆண்டுகளாக அது கவிஞரின் புதல்வர்கள் அனைவருக்கும் பகிர்ந்து தரப்படவில்லை. அண்ணாதுரை கண்ணதாசன் மட்டுமே அந்தக் காசோலைகளை காசாக்கி அனுபவித்து வருகிறார்.
அதேபோல் எங்கள் தந்தையார் கடைசிவரையிலும் வாழ்ந்த தி.நகர் வீட்டில் ஒரு சிறு அறையைக்கூட விட்டுவைக்காமல் அதை அவரது படுக்கை அறையாக மாற்றிவிட்டார். அந்த முழுக் கட்டிடத்தையும், வணிகக் கட்டிடமாக காந்தி கண்ணதாசன் பாவித்து வருகிறார். அதன் மூலமாக வருமானமும் பார்த்து வருகிறார்.
இப்படி எங்களது தந்தையாரின் சொத்துக்கள் மூலமாகக் கிடைக்கும் அத்தனை தொகையிலிருந்தும் சிறு பகுதியை ராயல்டியாக எங்களுக்குக் கொடுத்துவிட்டு, எந்தவிதக் கணக்கும், வழக்கும் இல்லாமல் அபகரித்துக் கொண்டிருக்கிறார் எங்களது மூத்த சகோதரரான காந்தி கண்ணதாசன்.
இப்படிப்பட்ட அநீதிகளுக்கு எங்களது இன்னொரு சகோதரரான திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களையும் அவர் உறுதுணையாக ஆக்கிக் கொண்டு, என் மற்ற சகோதர, சகோதரிகளையும் அவர் வஞ்சித்து வருகிறார்.
இது குறித்து நான் கேள்வி எழுப்பியதால், விக்கிபீடியாவில் ‘கவியரசர்’ கண்ணதாசன் தகவல் பக்கத்தில் இருந்த எனது பெயரான ‘கோபி கண்ணதாசன்’ என்பதில் ‘கண்ணதாசன்’ என்ற எனது தந்தையாரின் பெயரை வன்மமாக நீக்கிவிட்டு ‘கோபாலகிருஷ்ணன்’ என்று மாற்றிவிட்டார்.
இதை நான் பல முறைகள் திருத்தியும்கூட என் பெயரில் எங்களது தந்தையார் பெயர் இல்லாதபடி பார்த்துக் கொள்கிறார்.
எனவே, நீதி கேட்டு நான் விரைவில் சட்டப் போராட்டத்தைத் துவங்கவிருக்கிறேன்.
என் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தார்மீக ஆதரவினைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்து இது குறித்து விரிவாகப் பேச இருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார்.