தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர் விஷால்

அடுத்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் விஷால் முடிவெடுத்துள்ளதாக அவரது நட்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கெனவே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இறந்தவுடன் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றபோது அத்தேர்தலில் விஷால் போட்டியிட்டார்.ஆனால், விஷாலின் வேட்பு மனு பல்வேறு காரணங்களினால் தள்ளபடி செய்யப்பட்டது. அந்தத் தேர்தலின்போது விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் தலைவராக இருந்தார்.
இது தமிழ்ச் சினிமாவுலகத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய, மாநில ஆளும் அரசுகள்தான் தனது வேட்பு மனுவை திட்டமிட்டு தள்ளுபடி செய்ய வைத்தததாக நடிகர் விஷால் பகிரங்கமாக புகார் கூறினார்.இதையடுத்து விஷால் மீது கோபம் கொண்ட தமிழக அரசு படிப்படியாக விஷாலின் கவுரவத்தைக் குலைக்கும்விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரண்டிலும் இருந்த நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.இந்த உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றும் விஷாலுக்கு நீதி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் விஷால் தலையே காட்டவில்லை.
ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வழக்கு இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் விஷாலின் மனதில் மீண்டும் அரசியல் ஆசை துளிர் விட்டிருக்கிறதாம். இரண்டு பவர்புல் சங்கங்களில் தலைவராக இருந்த தன்னை திட்டமிட்டு ஓரங்கட்டி, தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுக கட்சி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நடிகர் விஷால். இந்தக் கோபத்தின் விளைவாகத்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் இறங்கவுள்ளார்.
அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் விஷால்.இதற்காக கடந்த மூன்றாண்டுகளாக தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக சென்னையில் பல்வேறு தொகுதிகளில் மக்களுக்கான உதவிகளை வழங்கி வந்தார். தனது அரசியல் கனவிற்காக தனது ரசிகர் மன்றத்தை வளர்த்து வைத்திருக்கும் விஷால், இந்தத் தேர்தலில் அவர்களை களத்தில் இறக்கிவிடுவார்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.இந்த முறை தனது வேட்பு மனு தள்ளுபடி ஆகாமல் பார்த்துக் கொள்ளும் ஏற்பாடுகளையும் விஷால் செய்துவிட்டாராம். அநேகமாக சென்ற முறை தேர்தலில் போட்டியிட நினைத்த அதே ராதாகிருஷ்ணன் தொகுதியிலேயே விஷால் மீண்டும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.