அர்ஜுன் ரெட்டியை பிரதிபலிக்கும் ஆதித்யா வர்மா

துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது.

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரிமேக் உரிமையை ஈ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பெற்றிருந்தது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க பாலா இயக்கத்தில் ’வர்மா’ படம் உருவானது. ஆனால் படம் தயாரிப்பு தரப்பை திருப்திபடுத்தாததால் கைவிடப்பட்டு புதிய படக்குழுவால் மீண்டும் உருவானது.

அந்த வகையில் கிரிசயா இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராகிவந்தது. துருவ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக பனித்தா சந்து அறிமுகமாகிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வர்மா படத்தின் டிரெய்லர் அர்ஜுன் ரெட்டி படத்தை ஒன்றிரண்டு இடங்களில் பிரதிபலித்திருந்த நிலையில் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் அர்ஜுன் ரெட்டி படத்தின் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

துருவ் கதாபாத்திரத்துக்கு உள்ள ‘அதீத கோபம்’ மட்டும் இந்த டீசரில் முக்கிய பங்கு வகிக்கிறது. துருவ்வின் நடிப்பும் விஜய் தேவரகொண்டாவை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அர்ஜுன் ரெட்டியைப் போலவே ஆக்‌ஷன், முத்தக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.