தேசிய விருதை எதிர்நோக்கும் நடிகை அபர்ணதி

தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பாரபட்சம் இன்றி பாராட்டப்படும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. அந்த விதத்தில் இந்த மாதம் வெளிவந்த ஒரு படம் ‘தேன்’.

மலைக்கிராம மக்களின் வாழ்வியலைத் திரைக்கதையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணதி நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

அப்படம் பற்றிய தனது அனுபவத்தை பத்திரிகையாளர்களிடம் அபர்ணதி பகிர்ந்து கொண்டார்.

’ “தேன்” படத்திற்குக் கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும். இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.

மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, படப்பிடிப்பு முடியும் வரை ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்கள் தான் எனக்குப் பரிந்துரைத்தார்கள். மலைப்பகுதியிலிருந்த போது நான் அந்த பகுதி பெண் போலவே மாறினேன். இப்படத்திற்காகப் பல வித்தியாசமான இடங்களுக்குப் பயணித்தோம். தேனியின் உட்புற மலைப்பகுதி கிராமங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். நாங்கள் படம்பிடித்த மலைப்பகுதி கிராமத்தில் வெறும் 28 குடும்பங்கள் மட்டுமே இருந்தன. எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லை. அங்கிருப்பவர்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும், 3 மணி நேரம் செலவழித்து 9 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும்.

மேலும் சில காட்சிகளைத் தேனியில் ஒரு நிஜமான அரசு மருத்துவமனையில் நடத்தினோம். அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் நடத்தினோம். மொத்தமாக 30 முதல் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.

மொத்த படப்பிடிப்பும் மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் சவாலான பாத்திரம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. படம் உலகம் முழுக்க நிறையத் திரைவிழாக்களில் கலந்துகொண்டு 48 விருதுகள் வரை வென்றுள்ளது. திரையரங்கில் படம் பார்த்தவர்களும் விமர்சகர்களும் என் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டி தேசிய விருது கிடைக்கும் எனக் கூறியிருப்பது பெரும் ஆசீர்வாதம்’ என்றார்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் அபர்ணதி தான் கதாநாயகி. அடுத்து அறிமுக இயக்குநர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் .