கதைபோதும் நாயகி முக்கியமில்லை- யோகி பாபு புதியதத்துவம்

நடிகர் யோகி பாபு நடித்து  300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’.
இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.
தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.
 இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,
“இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.
எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடனும் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.
இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்கு கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன்.
 இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.
ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது சென்னையில் பிறந்தவர்களுக்கும்  சினிமா கஷ்டம் தான்.
சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை  இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.
 2009 வந்த யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.
இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது.
உடனே அவனுக்குப் போன் செய்தேன்.என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அதற்குப் பிறகுதான் சந்தித்தோம்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.
Comments (0)
Add Comment