சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14 முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது.ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட வேகமாகக் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதி, படப்பிடிப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.