பாரதிராஜாவின் முரண்பட்ட அறிக்கையும் புதிய சங்க தொடக்கமும் சிறப்பு பார்வை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்தச் செய்தி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. பலர் இப்படி ஒரு சங்கம் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய சங்கத்தைத் தொடங்கி வைக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.அதனால், பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்பட்டது. ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், இது தொடர்பாக பாரதிராஜா விடுத்த(02.07.2020) அறிக்கையில் கூறியிருப்பதாவது……
நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது

இந்நிலையில் ஆகஸ்ட் 3 அன்று பாரதிராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்…..

என் இனிய தயாரிப்பாளர்களே…கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன்.பிரசவம் வலி மிக்கதுதான்.ஆனால் பிறப்பு அவசியமாச்சே.அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்…புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.

தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள்.தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல.தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும்.தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை.அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால்,அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் .

ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை.இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது.வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள்  காற்றில்கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன.முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன.இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும்.நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன.படவெளியீடுகள்,பணம் போட்டவர்களின் அபாய நிலை,எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம்.தாய் சங்கத்தை உடைக்கவில்லை.அவள் அப்படியே மெருகுற இருப்பாள்.திரை வீட்டின் ஆளுமை அவள்தான்.அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை.பிரித்தெடுக்கவும் இல்லை.இது செயல்பட வேண்டிய காலகட்டம்.கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது?அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம்.இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம்.சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம்.நிறைவாக சொல்வதென்றால்,இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது!பிள்ளைகளும்,தோழர்களும்,இணை வயதினரும்,என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கதொடக்கத்தை அறிவித்தபின்இந்த சங்கம் உருவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்தபோது,

புதிய சங்கம் தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை,இது மற்றொரு அமைப்பாகவே இருக்கும், அதன் உறுப்பினர்களாகவும் நாங்கள் தொடர்ந்து இருப்போம் அதன் வளர்ச்சியில் ஆதரவளிப்போம்.நடப்பில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் தொழிலை பாதுகாக்கும் நோக்கில் புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது,திரைப்படத்தை தயாரித்தல்,சந்தைப்படுத்துதல்,விநியோகித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் தேவைக்கு அதிக கவனம் தேவை.இது புதியதல்ல,ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில்,இதுபோன்ற தனி நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது மற்றும் வரையறுக்கப்பட்ட நடப்பு தயாரிப்பாளர்களுடன் மட்டுமே வெற்றிகரமாக இயங்குகிறது,அதே நேரத்தில் ஒரு வழக்கமான திரைப்பட தயாரிப்பாளர் குழுவும் அங்கு சீராக இயங்குகிறது.தமிழ் சினிமாவில் சுறுசுறுப்பான மற்றும் தற்போதைய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அத்தகைய தலைமை இல்லாத நிலையில்,பின்வரும் பகுதிகளில் ஒரு வலுவான தலைமைத்துவத்தையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள்:

1. திரைப்பட வணிகத்தில் கொரோனாவின் தாக்கத்தை பின் எழும் சவால்களை எதிர்கொள்ளவும்.

2. எந்தவொரு தடையும் இல்லாமல் தங்கள் படங்களை முடித்து வெளியிடவும், தயாரிப்பாளர்களின் வியாபாரத்தை பாதுகாக்கவும்.

3. கொரோனா தாக்கம் குறைந்துவிட்டால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த தமிழக அரசாங்கத்தை வலியுறுத்துதல் மற்றும் தியேட்டர்கள் திறந்து பல படங்களை வெளியிட அனுமதிக்க வலியுறுத்துவது.

4. உள்ளூர் வரியை நீக்குவதிலும்,திரைத்துறையை மீட்டெடுப்பது குறித்து தமிழக அரசாங்கத்தை வலியுறுத்தவும்.

5. நடப்பு தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் படங்களின் வணிகத்தில் ஒவ்வொரு வழியிலும் உதவவும்.மேற்கூறிய நோக்கங்களுடன் எனது தலைமையின் கீழ் இந்த புதிய சங்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்களை நாங்கள் உறுப்பினர்களாக சேர்த்த பின்னரே சங்கத்தின் நிர்வாக குழு உருவாக்கப்படும் இன்று (03.08.2020)உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் உறுப்பினர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,இந்த புதிய சங்கத்தை ஒரு மோதலாகவோ அல்லது முறிவாகவோ கருதவேண்டாம்.. தற்போதைய சூழ்நிலையில் இந்த தொடக்கம் திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசியமாக கருதுகிறேன்,அதற்கும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.திரைப்பட தயாரிப்பாளர்களிடம் எங்கள் புதிய சங்கத்தில் சேர்ந்து அதன் நோக்கங்களுக்கு ஆதரவளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகஸ்ட் 2 இரவு மாலை 7.30 மணிக்கு வெளியிட்டஅறிக்கையில்”சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது”என குறிப்பிட்டிருந்தார்

ஆகஸ்ட் 3 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பாரதிராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்…..

என் இனிய தயாரிப்பாளர்களே…கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான்.ஆனால் பிறப்பு அவசியமாச்சே.அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்… புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. என குறிப்பிட்டுள்ளார் சுமார் 18 மணி நேரத்தில் தனது முந்தைய அறிக்கையில் இருந்து முரண்பட்டு சங்கம் தொடங்கப்பட்டு,உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது என கூறியதுடன் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டது பற்றிய பதிவு எண்ணையும் பொதுவெளியில் வெளியிடுகிறார் பாரதிராஜா குறைந்தபட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர் பட்டியல், நிர்வாகிகள் பட்டியல் சமர்பிக்கப்பட்டால் மட்டுமே பதிவாளர் சங்கத்தை பதிவு செய்து பதிவு எண் வழங்குவார்.முன்னுக்கு பின் முரணாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டது அவர் மீதான நம்பகதன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது