துக்ளக் பத்திரிக்கை விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்காக அவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுளர்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாக பேசினார்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு பற்றி தவறான அவதூறான தகவல்களை பரப்புகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி திராவிட விடுதலை கழகத்தினர் நேற்று காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர்.
கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர் பகுதிகளில் நேற்று ரஜினிகாந்த் எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
நடக்காத ஒரு செய்தி பற்றி அவதூறாக வும் மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலும் ரஜினிகாந்த் பொதுமேடையில் பேசியிருக்கிறார். அதற்காக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதுபற்றி ரஜினிகாந்த் மன்னிப்பு கோராவிட்டால் அவரது தர்பார் திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்கிறார்கள்.
நேற்று ரஜினிகாந்த் மீது காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு உடனடியாக சி எஸ் ஆர் நகர் புகார்தாரர் இடம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற புகார்கள் அளிக்கும் போது வாங்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிடும் போலீசார் இந்த முறை உடனடியாக தங்கள் உயரதிகாரியிடம் கருத்து கேட்டு உடனடியாக புகாரை பதிவு செய்துகொண்டு சிஎஸ்ஆர் வழங்கி இருக்கிறார்கள். இதுவே ஆச்சரியகரமான மாற்றம் தான் என்கிறார்கள் புகார் கொடுத்தவர்கள்.
ரஜினிகாந்த் மீது மேலும் பல இடங்களில் போலீஸ் புகார் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் அமைப்புகள் அனைத்தும் இணைந்து ரஜினி மீது புகார் கொடுக்க திட்டமிட்டு வருகிறார்கள்
எடப்பாடி, ஜலகாண்டாபுரம், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ரஜினி மீது இன்று புகார் கொடுக்குமாறு திராவிட விடுதலைக் கழக சேலம் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது பொதுவாக ரஜினி போன்ற விஐபிக்கள் மீது புகார்கள் வரும்போது அதை தட்டிக் கழிப்பது தான் காவல்துறையின் நடவடிக்கையாக இருக்கும். ஆனால் இம்முறை ரஜினி மீது கொடுக்கப்படும் புகார்களை உடனே வாங்கி சி.எஸ்.ஆர் கொடுக்குமாறு எங்களுக்கு மேலிடத்திலிருந்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எஃப் ஐ ஆர் தயாரிக்கப்படும். பல காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அதை எதிர்த்து ரஜினி நீதிமன்றம் செல்லக்கூடும்.
ரஜினி மீதான தமிழக அரசின் பார்வையை அதிமுகவின் பார்வையை இந்த விவகாரம் வெளிப்படையாக்கும் என்கிறார்கள்.