பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. “கங்குபாய் கதியாவாடி” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கங்குபாயாக ஆலியாபட் நடிக்கிறார்.
எழுத்தாளர் ஹுசைன் சய்தி எழுதிய “மாஃபியா குயின்” புத்தகத்தில் இடம்பெற்ற கங்குபாய் பற்றிய கதையைத் தழுவி இப்படம் எழுதப்பட்டுள்ளது.
தன்னுடைய பிரமாண்ட விஷுவல்கள் மற்றும் சிந்தனைகளால் இதுவரை மெல்லிய உணர்வுகள் கொண்ட கனமான கதைகளை சொல்லி வந்த சஞ்சய் லீலா, இந்த முறை மாஃபியா உலகில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய பெண் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
கங்குபாய் 1939ஆம் வருடம், குஜராத்தின் காத்திர்வார் மாவட்டத்தில் அவரது பெற்றோருக்கு ஒரே மகளாய் பிறந்தார். தன்னுடைய 16ஆவது வயதில் காதல் கணவனை நம்பி மும்பைக்கு திரைப்படங்களில் நடிக்கும் கனவுகளோடு வந்தார். ஆனால் அவரோ 5௦௦ ரூபாய்க்கு மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுச் சென்றார்.
இந்தக் கதையை சொல்லும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சினிமா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இதனுடன் செப்டம்பர் 11ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.