தர்பார் திரைப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்தார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படம் தர்பார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தர்பார் திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இடங்களில் விநியோகஸ்தர்கள் சிலர் வந்ததாகவும், முருகதாஸுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது வசிப்பிடம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தை அணுகாமல், சில விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்றுபிப்ரவரி 17 மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து மிரட்டல்கள் எதுவும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், தாங்கள் புகாரைத் திரும்பப் பெறுவதாக அவர் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாக பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வதும், பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்று காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதும், வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவிப்பதும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் விநியோகஸ்தர்களுக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப்பெற்றுக்கொண்டதன் உண்மை பின்னணி குறித்து விசாரித்தோம். முருகதாஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படலாம் என்று பேச்சு திரையுலகினர் மத்தியில் எழுந்தது.