டாக்டர் முதல் பார்வை எப்படி?

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கிறது டாக்டர் படக்குழு. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது.

டாக்டர் கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன், டாக்டர்களைப் போலவே கையில் கிளவுஸ் அணிந்துகொண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கத்தியை கையில் வைத்திருக்கிறார். காலர் வைத்த டி ஷர்ட், கண்ணாடி, லோஃபர்ஸ் ஷூ என இதுவரை சிவகார்த்திகேயனை ரசிகர்கள் கண்டிராத புதிய லுக்குடன் காணப்படுகிறார்.

 சிவகார்த்திகேயனின் லுக் வரையிலும், அவரை ஒரு மருத்துவராக மட்டுமே காட்டுகிறது. ஆனால், அந்த சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருக்கும் நாற்காலியும் அதற்குக் கீழே வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கத்திகளும், சிவகார்த்திகேயனை ஒரு மருத்துவராக மட்டும் உணர்த்தவில்லை.

ரவுடிகளைப் பற்றிய படத்தில் அருவாள்கள் அடுக்கி வைப்பதும், டான்கள் பற்றிய படத்தில் துப்பாக்கிகளை அடுக்கிவைப்பது போல இதில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கத்திகள், இந்தப் படத்தின் கதை பற்றி வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்துவது போல இருக்கின்றன.

மருத்துவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தான் கொலை செய்ய விரும்பும் சிலரை திட்டமிட்டு தனது மருத்துவமனையில் அனுமதிக்கவைத்து அறுவை சிகிச்சையின்போது சில கொலைகளை செய்வது போல இந்தத் திரைப்படத்தின் கதை அமைந்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இதனை படக்குழு உறுதி செய்யவில்லை. ஒருவேளை டிரெய்லர் வெளியானால் இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியவரும்.

சிவகார்த்திகேயன், யோகி பாபு, வினய் ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திக்கு ஜோடியாக பிரியா மோகன் நடித்திருக்கிறார்.

இவர், தெலுங்கில் வெளியான கேங் லீடர் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர். டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து, KJR ஸ்டூடியோஸும் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மட்டுமில்லாமல், இன்னொரு ஆச்சர்யமும் காத்திருப்பதாக KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவிருக்கிறது.