செல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. இந்தப் படம் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் இந்தி படமான ‘அட்ராங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார்.

கர்ணன் படத்தில் மலையாள நடிகர் லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகிபாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷூடன் நடித்துவருகிறார்கள். இந்தப் படத்தின் பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதுபோல, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அக்‌ஷய்குமார் மற்றும் சாரா அலிகான் உடன் இணைந்து தனுஷ் அட்ராங்கி ரே படத்திலும் நடித்துவருகிறார்.

இவ்விரு படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை முடித்த கையோடு, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

நீண்ட நாட்களாகவே செல்வராகவன் – தனுஷ் கூட்டணி குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் படத்துக்கான பணிகள் தற்பொழுது துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏனெனில், தயாரிப்பாளர் தாணுவிற்கு மூன்று படங்கள் நடிக்கச் சம்மதம் சொல்லியிருந்தார் தனுஷ். அசுரன் மற்றும் கர்ணன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக செல்வராகவன் படம் தயாராக இருக்கிறது.

முதல்கட்டமாக ஸ்கிரிப்ட் மற்றும் இசைப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வா. எப்படியும் கார்த்திக் நரேன் படம் பிப்ரவரியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தனுஷ் – செல்வா படம் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இதுவரை தனுஷ் – செல்வா கூட்டணியில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.