தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் அக்ஷய்குமாருடன் இந்திப் படமான ‘அட்ராங்கிரே’. இவ்விரு படங்களுக்குமான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.இந்த நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார். தனுஷின் 43ஆவது படமாக இது தயாராக இருக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார். தவிர, படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.ஜி.வி.க்குப் பதிலாக புதிய இளம் இசையமைப்பாளரைப் படத்துக்காக கொண்டு வந்திருக்கிறது படக்குழு. சில முரண்பாடுகளால் ஜி.வி.பிரகாஷ்குமார் ‘தனுஷ் 43’இல் இருந்து வெளியேறிவிட்டார். இந்த நிலையில், ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக நியமித்திருக்கிறது படக்குழு.
தனுஷுக்கு ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தனுஷின் படத்திலிருந்து வெளியேறியிருந்தாலும், அவருக்குப் பதில் ஷான் இசையமைப்பாளராக வந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஏனெனில், அனிருத் உடன் கருத்து மோதல் ஏற்பட்டதும், தனுஷின் அடுத்த சாய்ஸாக இருந்தது ஷான் ரோல்டன்தான். ஷானுக்கு புது வாய்ப்புகளைக் கொடுத்தவரும் தனுஷ்தான். பா.பாண்டி, விஐபி 2 படங்களுக்கு ஷான்தான் இசையமைப்பாளர். ஜி.வி. இல்லை என்றதும், தனுஷ் உடனே ஷான் ரோல்டனுக்குத்தான் பேசியிருக்கிறார். இப்போது அந்தக் கூட்டணி உறுதியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கார்த்திக் நரேன் தற்பொழுது ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து தயாராக இருக்கிறார். படத்துக்கான படப்பிடிப்பானது டிசம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது.