இதுபற்றி ரஜினிகாந்த் ரசிகர் கனகராஜிடம் பேசினோம், என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி பாரப்பட்டி கிராமம்
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் கட் அவுட் வைத்து மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்வேன்.
2001-ம் ஆண்டு அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றேன். 2013 அவருடைய ஆயுள் அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கவும், அரசியலுக்கு வந்து மக்களுக்கு அவர் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் சேலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் யாகம் நடத்தினேன். இப்படி என் தலைவருக்காக பல நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன்.
70 வயதில் தலைவர் என்னா மாஸா… நடிக்கிறார். அதற்காகத் தலைவருக்கு வித்தியாசமான பாராட்டை தெரிவிக்க நானும் என்னுடைய நண்பர்கள் குரால்நத்தம் சந்திரசேகர், குளோபல் வெங்கட் ஆகியோர் சேர்ந்து 9-ம் தேதி `தர்பார்’ படம் சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸில் உள்ள 5 தியேட்டரில் திரையிடப்படும்போது திரையரங்குக்கு வெளியே உள்ள தலைவர் கட் அவுட்களுக்கு காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ முடிவெடுத்தோம்.
அதையடுத்து பெங்களூருவில் டாவன்கேர்சுகர் (DAVANGERESUGAR) என்ற தனியார் ஹெலிகாப்டர் கம்பெனியிடம் பேசினோம். 5 லட்சம் வாடகையும் அனுமதியும் பெற்றுக் கொடுத்தால் வருவதாகத் தெரிவித்தார்கள்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, அரசு கட்டடப் பொறியாளர், ஏர்போர்ட் என 6 துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சேலம் காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமே என்று கூறிவிட்டு அவர்களும் அனுமதி கொடுப்பதாகத் தெரிவித்தார்கள்.
ஆட்சியர் அலுவலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை என 3 துறையினர் அனுமதி கொடுத்துவிட்டார்கள். இன்னும் மூன்று துறையினர் இன்று கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவுவது விளம்பரத்துக்காகச் செய்யவில்லை. உண்மையிலேயே என் தலைவர் ரஜினி அதற்கும் மேலான தகுதி உடையவர். எங்களால் முடிந்த இந்தச் செயலை செய்கிறோம். ரஜினிதான் எங்கள் உயிர். அவருக்காக நாங்கள் எதையும் எக்காலத்திலும் செய்வோம்” என்றார்.