ரீமேக் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்- A.R.ரஹ்மான்

ஒரு திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அப்படி, பாலிவுட்டில் 2018இல் வெளியான படம் ‘அந்தாதூன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தப் படம் வெளியானது.

எதிர்பாராத காட்சியமைப்பும், புதுமையான ட்ரீட்மெண்டுமாகப் படம் பெரிய ஹிட். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது ‘அந்தாதூன்’. அதுமட்டுமல்ல, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. இப்போது, இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமை, தியாகராஜன் கைவசம் இருக்கிறது. தியாகராஜன் தயாரிக்கிறார் என்றால், ஹீரோ வேறு யார்? நடிகர் பிரசாந்த்தான், ஆயுஷ்மான் குரானா ரோலில் நடிக்க இருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில கருத்து வேறுபாட்டினால், இப்போது மோகன்ராஜா இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை. அவருக்குப் பதிலாக, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல்.
இந்தப் படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்துவருகிறது. கையோடு, படத்துக்காக உடல் எடை குறைக்கும் பணியில் பிரசாந்த் தீவிரமாக இருக்கிறார்.

இந்த நிலையில், ஒரு ஹிட்டான படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்கள் என்பதால், படத்தில் வெரைட்டியாக சில விஷயங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது தயாரிப்பு தரப்பு. படத்தின் கதையில் பத்து பாடல்கள் வரை இருக்கிறது என்பதால், இசையில் புதுமையை கொண்டுவர வேண்டும் என்று, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியிருக்கிறது படக்குழு.

தயாரிப்பு தரப்பிலிருந்து படத்துக்கு இசையமைக்கக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரீமேக் படத்துக்கு இசையமைப்பதில்லை என்று மறுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிகழ்வினால், பெரிய அதிர்ச்சியும் ஏமாற்றத்துக்கும் தியாகராஜனும் பிரசாந்தும் ஆளாகியிருக்கிறார்கள்…