மிஷ்கினை அதிர வைத்த திரையரங்க உரிமையாளர்

இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டாவது முறையாக என்னைப் படம் பார்க்கவைத்தார். அதுதான் என்னுடைய முதல் திரைப்படம். அது புரூஸ் லீ நடித்த ‘எண்டர் தி டிராகன்’ (Enter The Dragon).

சிறுவனாய் பல திரைப்படங்களை இந்த என்.வி.ஜி.பி திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். கால ஓட்டத்தில் பல ஊர்களுக்கு நகர்ந்து கடைசியாகச் சென்னை வந்து சேர்ந்து நகரவாசியாகிவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள இடங்களில் என் அடுத்த திரைப்படத்திற்காக லொக்கேஷன் ஸ்கவுட்டிங் (Location Scouting) செய்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். திடீரென்று மனதில் ஒரு உதயம். காரை எடுத்துக்கொண்டு என்.வி.ஜி.பி தியேட்டருக்கு வந்தேன். வாசலுக்கு வந்து அண்ணாந்து பார்க்க. ஒரு பெரும் ஆலமரம் போல் அந்த தியேட்டர் நின்று கொண்டிருந்தது. காவல்காரர் “யாருய்யா நீங்க, என்ன வேணும்? என்று கேட்க. “நான் இந்த தியேட்டர் ஓனரைப் பார்க்கணும்.” என்றேன்.

 

காவல்காரர் மாடிப்படி ஏறிச்சென்றார். ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான ஒரு மனிதர் படிக்கட்டில் இறங்கி வந்தார். என்னைப் பார்த்து “என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டார். “நான் கொஞ்சம் தியேட்டரை பார்க்கலாமா?” என்று தாழ்மையுடன் கேட்டேன். “இங்க படம் ஏதும் ஓடலைய்யா.” என்றார். ”இது என் வாழ்க்கையே ஓடவைத்த தியேட்டர் அய்யா.” என்றேன். ”நீங்க யாரு?” என்று அப்போது கேட்டார். “என் பேரு மிஷ்கின். நான் ஒரு திரைப்பட இயக்குநர்.” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். “என்ன படம்லாம் பண்ணிருக்கீங்க?” என்று கேட்டார். என் அருகில் நின்ற உதவி இயக்குநர் என்னுடைய எல்லா படங்களின் பெயரையும் பட்டியலிட்டான். “நான் எந்த படமும் பாக்கலையே.” என்று என் ஆணவத்தின் தலையில் கொட்டினார். நான் சிரித்து “ஆமாய்யா. அதெல்லாம் சாதாரணப் படங்கள்தான். Enter The Dragon மாதிரி ஒரு படம் இன்னும் பண்ணல.” என்றேன். அவர் புன்னகை செய்து ”வாங்க தியேட்டர காட்டுறேன்.” என்று உள்ளே அழைத்துப் போனார்.

நான் உள்ளே ஐந்து வயது சிறுவனாக நுழைந்தேன். இருட்டில் ஆயிரத்துக்கு மேல் இருந்த நாற்காலிகளைத் தடவிப்பார்த்தேன். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். பெரும் சத்தங்களுடன் அமைதியாக ஒரு திரைப்படம் ஓடியது. புரூஸ் லீ காற்றில் பறந்து கெட்டவர்களைத் தாக்கினார்.
அந்த தியேட்டருக்குள் நான் சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. இரண்டு மூன்று போட்டோக்களை என் உதவி இயக்குநர் எடுத்தான். நான் மீண்டும் தியேட்டருக்குள்ளிருந்து வெளியே வர. எனது வயது அதிகமானது.

“ஏன் தியேட்டருல்ல படம் ஓட்டல.” என்று ஓனரிடம் கேட்டேன். ”காலம் மாறிடிச்சுய்யா. டிவி வந்துருச்சி, நெட் வந்துருச்சி, பைரசி வந்துருச்சி, எல்லாம் வந்துருச்சி. தியேட்டர நம்பி முதலீடு போட முடியல. அதுனாலதான் தியேட்டர்ல படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டோம்ய்யா.” என்றார். நான் மௌனமாக நின்றேன். “வாங்க ஒரு காபி சாப்பிடலாம் என்று அந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அந்த காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது மனைவியிடம் “நாலு காபி போட்டு குடும்மா.” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

என் நண்பர் ஸ்ரீகாந்தும், என் உதவி இயக்குநரும் அவரிடம் பேசிக்கொண்டிருக்க நான் மௌனமாக அமர்ந்திருந்தேன். காபி வந்தது. குடித்துவிட்டு வெளியே வந்தேன். நான்கு இளைஞர்கள் ஓடிவந்து ”சார், செல்பி எடுத்துக்கணும் சார்.” என்றார்கள். தியேட்டரின் முதலாளி அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார். “ஓ இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்றார். அந்த இளைஞர்கள் “இவர் படமெல்லாம் எங்களுக்கு புடிக்கும் சார்.” என்றார்கள்.

“நானும் என் மனைவியும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? என் குழந்தைகள் அமெரிக்காவில் இருக்காங்க. அவுங்களுக்கு அனுப்புவேன்.” என்றார். “எடுத்துக்கோங்கய்யா.” என்று நான் அவர்கள் இருவருக்கும் அருகே நிற்க, அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

“ரொம்ப நன்றிய்யா.” என்று சொல்லி நான் காரில் ஏறப்போய் திடீரென்று நின்று, திரும்பி அவரைப் பார்த்து, ”படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டீங்க. இப்ப இந்த தியேட்டர என்னய்யா பண்ணப்போறீங்க?” என்று கேட்டேன். ”அடுத்தவாரம் இந்த தியேட்டர இடிக்கப் போறோம்யா.” என்று சொன்னார். நெஞ்சில் வலியுடன் நான் காரில் ஏறி கதவை சாத்த, கார் கிளம்பியது. ஒரு இயக்குநராக அந்த தியேட்டரை கடந்து வந்துவிட்டேன். ஆனால் அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றான்.

– இயக்குநர் மிஷ்கின் முகநூல் பதிவிலிருந்து…