பழைய நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஹிருத்திக் ரோஷன்-கங்கனா ரணாவத் காட்டம்

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தும் ஹிருத்திக் ரோஷனும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது. அறிவு இல்லாத முன்னாள் காதலர் என்று ஹிருத்திக்கை கங்கனா விமர்சித்து இருந்தார். கங்கனாவை காதலிக்கவில்லை என்று ஹிருத்திக் ரோஷன் மறுத்தார். இருவரும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். கங்கனா தனக்கு நிறைய மின்னஞ்சல் அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார் என்று ஹிருத்திக் ரோஷன் சைபர் கிரைம் போலீசில் 2016-ல் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணை முடங்கி கிடப்பதாக ஹிருத்திக்கின் வக்கீல் தற்போது குறை கூறினார். இதையடுத்து வழக்கை குற்றப்புலனாய்வு துறை விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்த கங்கனா ரணாவத், “இப்போது மீண்டும் அழ ஆரம்பித்து இருக்கிறார். எங்கள் காதல் முறிவு மற்றும் அவரது திருமண விவாகரத்து நடந்து பல வருடங்கள் ஆகியும் அதை கடந்து செல்ல மறுக்கிறார். சொந்த வாழ்க்கையில் சில தைரியத்தை நான் திரட்டும் போது மீண்டும் பழைய நாடகத்தை தொடங்கி இருக்கிறார். சிறிய விஷயத்துக்காக ஹிருத்திக் எவ்வளவு காலம்தான் அழுவார்” என்று சாடி உள்ளார். இந்த மோதல் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.