வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் பிறந்த நாள் – சிறப்புக்கட்டுரை

0
475

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் ஆதிக்கம் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றுவரை இருந்து வருகிறது
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக நடிப்பு, வியாபாரம் என சமபலத்தில் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவி.எம்.ராஜன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற கதாநாயக நடிகர்கள் உருவெடுத்தார்கள் இருந்தபோதிலும் எம்.ஜி.ஆர்-சிவாஜி புகழ் வெளிச்சத்தில் இவர்களால் முதல் இடத்துக்கு வர இயலாமல் போனது
ஆறேழு நாயகர்கள் இருந்த காலகட்டத்தில், தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு, நடையிலோ நடிப்பிலோ வசன உச்சரிப்பிலோ எவர் சாயலுமில்லாமல், வலம் வந்த நடிகர்… ஜெய்சங்கர்.
ஸ்டைலீஷான ரவிச்சந்திரன் ஒருபக்கமும் சிவாஜியை இமிடேட் செய்யும் ஏவிஎம்.ராஜனும் அப்போதுதான் வந்திருந்த காலகட்டம். ஆனால், எவர் மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார் ஜெய்சங்கர். மிகப்பெரிய வக்கீல் குடும்பம். ஆனால் இவருக்கோ நடிப்பில் ஆர்வம். சினிமாக் கம்பெனிகளுக்கு நடையாய் நடந்தார். ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ இருக்கு’ என்று உறுதியாக நம்பினார் இயக்குநர் ஜோஸப் தளியத் அவரது இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த
முதல் படம் ‘இரவும் பகலும்’நல்ல நடிகர் எனபெயரை பெற்றுத்தந்தது

கே.சங்கரின் ‘பஞ்சவர்ணக்கிளி’யிலும் வித்தியாசமான கேரக்டர். அடுத்து ஏவிஎம்மின் ‘குழந்தையும் தெய்வமும்’ திரைப்படமும் பெண்கள் பக்கம் இவரைக் கொண்டு சேர்த்தது. இவரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை வைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க தொடங்கியதுவல்லவன் ஒருவன்,சிஐடி.சங்கர், ஜெய்சங்கரை வசூல் சக்கரவர்த்தியாக்கியது. கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர். பின்னாளில், எம்ஜிஆர் ’ரகசிய போலீஸ் 115’, சிவாஜி ’தங்கச்சுரங்கம்’ மாதிரியான படங்கள் பண்ணுவதற்கு, இவரின் படங்களே அவர்களுக்குள்அந்த ஆசையை வளர்த்தன என்பார்கள்.

ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம், பஞ்சவர்ணக்கிளிமாதிரியான குடும்பக் கதைப் படங்கள், நடுவேபொம்மலாட்டம்,வரவேற்பு,பூவா தலையா,என காமெடி படங்கள் என ஜனரஞ்சகமாகவலம்
ஜெய்சங்கர்.

பாலசந்தரின் இயக்கத்தில் இவர் நடித்தநூற்றுக்கு நூறுமிகச்சிறந்த நடிகர் எனும் பெயரைப் பெற்றுத் தந்தது. எம்ஜிஆர், சிவாஜிக்கு சம்பளம் கொடுக்க முடியாத சிறிய தயாரிப்பாளர்களெல்லாம் ஜெய்சங்கரை தேடி வந்தார்கள் அவர்களால் கொடுக்க முடிந்தசம்பளத்தை பெற்றுக்கொண்டுநடித்துக் கொடுத்தார் ஜெய்சங்கர்.

இன்றைய ஹீரோக்கள் போன்று தொந்தரவு, கால்ஷீட் சொதப்பல் இல்லாமல் ஒப்புக்கொண்ட நாட்களில் ஈகோ எதுவும் பார்க்காமல்  ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார். இதனால் தயாரிப்பு செலவு குறைந்தது தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க மகிழ்ந்து கொண்டாடினார்கள் ஜெய்சங்கரை

கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைவான சம்பளத்திலும் பாக்கி வைத்தால் அதையும் கேட்பதுமில்லை. ‘அவங்ககிட்ட இல்லேன்னுதான் நமக்குத் தரமுடியாம இருக்காங்க. அவங்களுக்குக் கிடைக்கும் போது தரட்டும். கிடைச்சும் தரலையா… பரவாயில்ல’ என்று அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர் ஜெய்சங்கர் என்கின்றனர் மூத்த தயாரிப்பாளர்கள்

ஜெய்சங்கர் நாயகனாகநடித்தபடங்கள்பெரும்பான்மையானவைபட்ஜெட் படங்கள். ஆனால் போட்ட பணத்தைவிட மூன்று நான்கு மடங்கு லாபம் தந்தன.  யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ என்று சொல்லி, நட்புடன் பேசுவதுதான் ஜெய்சங்கர் குணம். பின்னாளில், இந்த ‘ஹாய்’ என்ற வார்த்தையே ஜெய்சங்கரை அடையாளமாகிற்று.

சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் கதாநாயகனாக ஜெய்சங்கர் மாறினார் படங்கள் குவிந்தன அதன் காரணமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கரின் படங்கள் வெளியாகும். சில சமயங்களில், ஒரே வெள்ளிக்கிழமையில், இவரின் இரண்டு படங்கள் கூட வெளியாகி, வெற்றிபெறும்.

ஒருபக்கம், ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூலமாக ஸ்டைலீஷ் மேனரிஸம் காட்டினார். இது எம்ஜிஆர் ரசிகர்களையும் கவர்ந்தது. இன்னொரு பக்கம், செல்வமகள்,பொம்மலாட்டம், பூவா தலையா,யார் நீ,பூவா,வைரம்,டீச்சரம்மா,குழந்தையும் தெய்வமும்,கண்ணன் வருவான்,மன்னிப்பு,அவசர கல்யாணம்,பட்டணத்தில் பூதம்,‘உள்ளத்தில் குழந்தையடி,மாதிரியான படங்களில் நடித்து, சிவாஜி ரசிகர்களையும் கவர்ந்தார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி என பல ரூட்டுகளிலும் ஜெயித்தார் ஜெய்சங்கர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என பட்டியலில்உயர்ந்தார்

வயது கூடிக்கொண்டே வரகதாநாயகனாக நடிக்கும்
படங்கள் குறைந்தது,கமல், ரஜினி காலகட்டம். எல்லோருக்கும் பிடித்த நடிகர், வில்லனாக நடித்தால் புதுமையாக இருக்கும் என ‘முரட்டுகாளை’யில் வில்லனாக நடிக்கக் கேட்டார்கள். சம்மதித்தார். இவரின் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டது. அடுத்தடுத்து வில்லனாக வலம் வந்தார். ‘அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘ஊமைவிழிகள்’ குணச்சித்திரக் கேரக்டர், அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களை வழங்கக் காரணமாக அமைந்தது. எல்லோருக்கும் பிடித்த நடிகர்களின் பட்டியலில் ஜெய்சங்கர் இருப்பதற்கு, அவரின் நடிப்பும் வேகமும் சிரித்த முகமும் மட்டுமே காரணமில்லை. அவரின் பண்பும் அன்பும் கனிவும் கருணையும் நிஜ ஹீரோவாக்கிற்று!

தமிழ் சினிமாவில் தன்னுடைய பெயரே கேரக்டர் பெயராக, படத்தின் பெயராகக் கொண்டு அதிகம் நடித்தது ஜெய்சங்கராகத்தான் இருக்கும். ஜெய், சங்கர் என்றெல்லாம் இவருக்கு கேரக்டர் பெயர் அமைந்தன. அதேபோல், அறிமுகமான முதல் படத்திலேயே டபுள் ரோல் பண்ணிய நடிகரும் ஜெய்சங்கராகத்தான் இருப்பார். வெரைட்டி காட்டி அசத்தியிருப்பார்.

ஜெய்சங்கரின் ரசிகை என்ற கதையை வைத்துக்கொண்டே ‘சினிமா பைத்தியம்’ என்ற படத்தை இயக்கினார் முக்தா சீனிவாசன். ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த ஜெயசித்ரா, இதில் நடிகர் ஜெய்சங்கரின் ரசிகையாக நடித்திருப்பார். இதுவும் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு என கூறலாம்

ஜெய்சங்கர் ஆகச்சிறந்த நடிகரோ இல்லையோ… ஆனால், தனித்துவம் மிக்க கலைஞர். அதனால்தான் இன்றைக்கும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். மக்கள் கலைஞர் என்று போற்றப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here