அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஜெய்பீம் டிரைலர்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில்  வெளியாகும் படம் ஜெய் பீம்.

அப்படம் பேசப்போகும் சம்பவங்கள் என்ன என்பது முழுமையாகத் தெரியாத நிலையில் அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெய்பீம் இருக்கிறது நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் முன்னோட்டத்தை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ஜெய் பீம் விவரிக்க போகிறது என்பது முன்னோட்டத்தை பார்க்கும் போது தெரிகிறது

சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத்தன்மையும் அப்பாவி உயிர்களை பாதிக்க, வழக்கறிஞர் சந்துரு இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறார். விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் திரைக்கதை சொல்லப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டத்தை இந்த டீஸர் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த டீஸரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சூர்யா கூறியிருப்பதாவது:
உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவைத் தரும் ஜெய் பீம்!”.இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.