ரஜினி-கமல் இணையும் படம்

41 வருடங்களுக்குப் பின்னர் ஒரே படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், அலாவுதீனும் அற்புதவிளக்கும் எனப் பல திரைப்படங்களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தனர். 1979-ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தத் திரைப்படத்திலும் அவர்கள் ஒன்றாகப் பணியாற்றவில்லை.

 தனித்தனியாக பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினி-கமல்மீண்டும் எப்போது இணையப் போகிறார்கள் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.

இந்த நிலையில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கமல்-ரஜினி திரையில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வருகிறது.

அரசியல் பணிகளில் இருவரும் மும்முரமாக செயல்பட்டுவரும் நிலையிலும் திரைப்படங்களில் நடிக்கவும் அவர்கள் நேரம் ஒதுக்கியுள்ளனர்.
தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 168’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக ‘DT NEXT’ ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியானது.

தற்போது விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்படுகிறது. வரும் ஜுன் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

எனினும் கமல்ஹாசன் மற்றும் ரஜினி தரப்பிலிருந்து இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. ரஜினியும்-கமலும் அரசியலில் இணைவார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவர்கள் திரையில் இணைவது அதற்கான முன்னோட்டமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.