கோபத்தையும் ரோஷத்தையும் விட்டுட்டு நிக்குற ஆளுங்க நாங்க இல்லை. என் அப்பன், பாட்டன், பூட்டனெல்லாம் அந்த மாதிரிதான். நாளைக்கு என் புள்ளையும் அந்த மாதிரிதான்” என்ற வசனத்துடன் தொடங்குகிறது வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டிரெய்லர். ஏதோ ஒரு காரணத்துக்காக (குடும்பத்துக்காக இல்லை) கொலை செய்துவிட்டு 16 வருடங்களை ஜெயிலில் கழித்துவிட்டு வெளியே வருகிறார் சரத்குமார்.
ஜெயிலுக்குப் போனதற்கு வியாக்கானமாக மேலே குறிப்பிட்ட வசனத்தைச் சொன்னதால், இவர்களது வாசம்கூட படக்கூடாதென மகன், மகளை வேறு ஊருக்கு அழைத்துச்சென்று ஆளாக்கும் ராதிகா, 16 வருடங்கள் கழித்து கணவன் வந்த கொண்டாட்டத்தில் இருக்கும்போது, அவரால் பிள்ளைக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைகளை நோக்கித்தான் திரைக்கதை நகர்கிறது என்பதை மார்கழி மாசத்து பனி போல அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது வானம் கொட்டட்டும் டிரெய்லர்.
அண்ணன், தங்கை கேரக்டரில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர்களின் காட்சிகள் அழகாக இருக்கின்றன. கண்கள் முழுவதும் ஆசையுடன் பார்க்கும் ராதிகாவின் டிரேட் மார்க் பார்வை, கிழக்குச் சீமையிலே படத்தில் பார்த்தது போலவே இன்று வரையிலும் இருக்கிறது.
சாந்தனு பாக்யராஜும் மடோனா செபாஸ்டியனும் இந்தத் திரைப்படம் ஒரு பிரேக்காக அமைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மடோனா பார்க்க அழகாக இருக்கிறார். நன்றாக நடிப்பார் என்றும் தெரியும்.