மாஸ்டர் ரீலீஸ் எப்போது?

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவால் நேற்று வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாதது விஜய் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழு ஆறுதல் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதோடு ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும், இந்த படத்தின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருமான வரித் துறை சோதனை போன்ற பல்வேறு போராட்டத்துக்கு மத்தியில் இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிய நிலையில் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்,  நேற்றுமாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இதனால் விஜய் ரசிகர்களுக்கும், முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து ரசிக்கத் திட்டமிட்டிருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ரசிகர்கள் மட்டுமின்றி இப்படக்குழுவும் வருத்தத்தில் இருக்கிறது. இதுகுறித்து மாஸ்டர் படத்தில் பணியாற்றியிருந்த இயக்குநர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் மாஸ்டர் படம் வெளியாகியிருக்கும். டெல்லியில் நடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காற்று மாசு, அதையடுத்து போராட்டம், வருமானவரித் துறையினர் சோதனை எனப் பல சிக்கல் ஏற்பட்டது.

இப்போது இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ரசிகனாக இது என்னை வருத்தமடையச் செய்கிறது.

எனினும் இறுதியில் வெற்றி கிடைக்கும். முதலில் வாழ்வது தான் முக்கியம், பிறகுதான் கொண்டாட்டமெல்லாம்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதுபோன்று, ஒருவேளை இன்று படம் திரைக்கு வந்திருந்தால், திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளித்திருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்களும் கவலைத் தெரிவிக்கின்றனர்.

நேற்று மாஸ்டர் படம் திரைக்கு வராவிட்டாலும், #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமாக எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏமாற்றத்தில் உள்ள ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளது.

அதில், “ரசிகர்கள் எப்படி எங்களைக் காணமுடியாமல் வருந்துகிறீர்களோ? அதுபோன்று நாங்களும் உங்களைக் காணமுடியாமல் வருந்துகிறோம். யாரோ ஒரு மாஸ்டர் மைண்ட் (master mind) கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவோம். வலுவாக மீண்டு வருவோம். பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்” என்று கூறி ஒரு போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளது எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ்.

அந்த போஸ்டரில் ஊரடங்கு உத்தரவு நம்முடைய உத்வேகத்தைத் தடுத்திடக் கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்” என்று ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.