நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு உதவி

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக வேலை இழந்து தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.

இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதன் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், மக்கள் பயத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்னும் சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்குப் பல நாட்கள் முன்பாகவே தமிழகத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் வேலை செய்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலையும், வருமானமும் இன்றி தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் அல்லல்பட்டு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஃபெப்சி அமைப்பிற்கு தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர், நடிகைகளும் நிதியுதவி அளித்து வந்தனர். மேலும் அவர்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வந்தனர்.


இந்த நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அரசு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உரிய ஆதாரங்களை அரசு குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது வாட்ஸ் அப் எண்ணிற்கோ இரு தினங்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை, திரைப்பட நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.