சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். குடும்பப்பாங்கான படங்களை இயக்கி வந்த பாண்டிராஜ் முதன் முறையாக தனது பாணியில் இருந்து விலகி இதனை முழுநீள ஆக்சன் படமாக இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் சென்னையை தொடர்ந்து, காரைக்குடியில் நடைபெற உள்ளது. குறிப்பாக சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளையே லோகேஷ் கனகராஜும் தேர்வு செய்து வைத்திருக்கிறாராம்.
ஆனால் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரண்டு பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக்கு தற்போதைய சூழலில் அனுமதி தர முடியாது என விக்ரம் படக்குழுவினருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனராம். சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இன்னும் பத்து நாட்கள் நடைபெற இருப்பதால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு தாமதமாகிறது என சொல்லப்படுகிறது.