தர்பார் விழாவில் ரஜினி பேசியது என்ன?

தர்பார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்களிடம் என்ன பேசவேண்டும் என்று நினைத்தாரோ அதனைப் பேசியுள்ளார்ரஜினி.

நேற்று மாலை சென்னையில் நடைெற்ற தர்பார் படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி
தன்னை விருப்பமில்லாமல் கல்லூரியில் சேர்த்ததிலிருந்து, அண்ணன் கொடுத்த எக்சாம் ஃபீஸ் பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரயிலேறி டிக்கெட் இல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டி, பிறகு தன்னை எப்படி நம்பிக்கையான மனிதனாக அங்கிருந்தவர்களிடம் உணர்த்தியதை கூறியவர்

“முடிக்கும் தருவாயில், என்னை யாரென்றே தெரியாமல், முன்பின் அறியாத என்னை இவன் தவறு செய்யமாட்டான் என்று அன்று தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டார் அந்த டிக்கெட் பரிசோதகர்” என்று ரஜினி கூறியதைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது.

“நம்பிக்கை. அதுதான் அன்று என்னை வாழவைத்தது. ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்த பாலச்சந்தர் அவர்கள், நான்கு வருடமாக அந்தப் பெயரை யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார்.

இதயத்துக்கு நெருக்கமான அந்தப் பெயரை நல்ல நடிகன் ஒருவனுக்குத்தான் வைக்கவேண்டும் என்று வைத்திருந்தார். என் மீது நம்பிக்கை வைத்து, எனக்குக் கொடுத்த அந்தப் பெயரை நான் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்.
என்னை ஹீரோவாக வைத்துப் படமெடுத்தால் படம் லாஸ் ஆகிடும். தெருவுல தான் வந்து நிக்கணும் என எத்தனையோ பேர் சொல்லியிருந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து கலைஞானம் எடுத்த படம் ஹிட் ஆனது.
அவரது நம்பிக்கையும் வீண் போகல. 140 தயாரிப்பாளர்களுக்கும் மேலாக, என் மீது நம்பிக்கை வைத்து, ரஜினியை வைத்துப் படம் எடுத்தால் அது வெற்றிபெறும் என்று வைத்த நம்பிக்கை வீண் போகல. இதையெல்லாம் போல, நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண்போகாது” என்று ரஜினி சொல்லி முடிப்பதற்குள் ஒரு கிரிக்கெட் போட்டியின் மைதானம் மாதிரி மாறியது எழும்பூரிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கைதட்டல் ஓய்ந்ததும் இரண்டாவது கதையை ஆரம்பித்தார் ரஜினி. “16 வயதினிலே திரைப்படம் மிக முக்கியமானபடம். அதற்கு முன்பே சில படங்களில் நான் நடித்திருந்தாலும், 16 வயதினிலே தான் என்னை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்த திரைப்படம்.

அந்தப் படம் முடித்த சில நாட்களில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டார். என்னிடம் கால்ஷீட் இருந்ததால் நான் சரியென்று சொல்லிவிட்டேன். சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டேன்.
பிறகு அவர் குறைத்துப்பேச, நான் சரியென்று சொல்ல, அவர் மீண்டும் குறைக்க என்று 6000 ரூபாய் சம்பளத்தில் வந்து நின்றது. நான் சம்மதித்துவிட்டேன். டோக்கன் அட்வான்ஸ் மாதிரி 500 ரூபாய் கொடுங்க என்று கேட்டதும், ‘என்னிடம் இப்போது பணம் இல்லை. நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும், மேக்-அப் போடுவதற்கு முன்பாக பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்றார்.
நானும் சரியென்று, ஷூட்டிங் அன்று காத்திருந்தேன். கார் வந்ததும் அதில் ஏறி ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கு ஹீரோ வந்து மேக்-அப் போடுவதாக சொன்னார்கள். சரி, அதெல்லாம் இருக்கட்டும் என் பணத்தை எப்ப தருவீங்க என்று கேட்டேன்.
புரொடியூசர் வரட்டும் மேக்-அப் போடுங்க என்றார்கள். இல்லை பணம் கொடுத்தால் தான் மேக்-அப் போடுவேன் என்று கூறி நான் மறுத்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து ஒரு அம்பாசிடர் கார் ஒன்று வேகமாக வந்துநின்றது. அதில் வந்த தயாரிப்பாளர், ‘என்னடா பணம் தரலைன்னா மேக்-அப் போட மாட்டியா. நாலு படம் பண்ணியிருக்க. அதுக்குள்ள உனக்கு இவ்வளவு திமிரா என்று கேட்டு அங்கிருந்து வெளியேற்றினார்.
திரும்ப வருவதற்கு என்னிடம் காசு கூட இல்லை. அங்கிருந்து அப்படியே நடக்கத் தொடங்கினேன். வழியெல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘இது எப்படி இருக்கு?’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
பஸ்ஸில் சென்றவர்கள் முதல் நடந்து சென்றவர்கள் வரை ‘பரட்டை, இது எப்டி இருக்கு?’ என்று பேசிக்கொண்டு போவதை கவனித்தேன். அன்று முடிவு செய்தேன்.
இதே தமிழ்சினிமாவில் வெற்றி பெற்று, இதே ரோட்டுல ஒரு விலை உயர்ந்த காரை ஓட்டிக்கொண்டு வந்து கால் மீது கால் போட்டு உட்காரல என்று சொன்னால் நான் ரஜினிகாந்த் இல்லைடா’ என்று உறுதியெடுத்தேன்.
அதன்பிறகு இரண்டு வருடம் கழித்து, ஏ.வி.எம். செட்டியாரிடமிருந்து இத்தாலியன் ஃபியட் காரினை, நாலேகால் லட்சம் ரூபாய்க்கு லோன் போட்டு வாங்கி வீட்டில் நிறுத்த இடமில்லை.
காருக்கு டிரைவர் யாராவது பார்க்கலாமா என்றார்கள். ஃபாரீன் காருக்கு ஃபாரீன் டிரைவர் தான் வேண்டும் என்று தேடத் தொடங்கினோம். ராபின்சன் என்ற பெயரில் ஆறு அடி உயரத்தில் ஒருவர் வந்தார். யூனிஃபார்ம், பெல்ட், ஷூ எல்லாம் போட சொல்லி வேலைல சேர்த்தேன்.
அடுத்த நாள் காலைல ஒரு எட்டு மணிக்கு, ‘ராபின்சன் ரிப்போர்ட்டிங் சார்’ அப்டின்னு வந்து நின்னார். ‘ஓகே லெட்ஸ் கோ’ என சொல்லி போகும்போது, ‘ஃப்ரண்ட் சீட் ஆர் பேக் சீட் சார்’ என ராபின்சன் கேட்டதும், அவர் கதவைத் திறந்துவிட ஏறி உக்காந்து ‘உட்றா வண்டியை ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு’ன்னு சொல்லிப் போனேன்.
எந்த இடத்துல உன்னை நடிக்க வைக்கமுடியாது போடான்னு சொன்னாங்களோ, அதே இடத்துல வண்டியை நிறுத்தி; வண்டி மேல ஏறி உக்காந்து, 555 சிகரெட்” என்று ரஜினி சொன்னதுதான் தாமதம், பேரலையைக் கண்டதுபோல கூடியிருந்தவர்கள் கத்தத் தொடங்கிவிட்டார்கள். ஏன், ரஜினிக்கும் கூட சிரிப்பு வந்துவிட்டது. பிறகு தொடர்ந்தார்.

நான் வந்ததைப் பாத்துட்டு யாரோ வந்திருக்காங்க போலன்னு எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தாங்க. ஒன்னுக்கு, ரெண்டு சிகரெட்டா புடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பி கவிதாலயாவுக்கு பாலச்சந்தர் ஐயாவை பாக்கப்போனேன்.

அவர்கிட்டபோய், ‘ஐயா கார் வாங்கியிருக்கேன். நீங்க தொட்டு ஆசிர்வாதம் பண்ணனும்’ எனக் கேட்டதும் வா போகலாம்னு கிளம்பி வந்தாங்க. வந்தவங்க காரை கொஞ்சம் தான் பாத்தாங்க. ராபின்சனை தான் பாத்தாங்க. அப்பறம் அவரை உக்கார வெச்சு வண்டியை ஓட்டிக்கிட்டு போனோம்.
இதை ஏன் சொல்றேன்னா… அந்த ரெண்டு வருஷத்துல நான் கார் வாங்குனதுக்குக் காரணம் என் உழைப்பு, புத்திசாலித்தனம்ன்னு சொன்னா அது தப்பாகிடும். அந்த நேரத்துல எனக்குக் கிடைச்ச ரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சரியான நேரத்துல எனக்கு கிடைச்சவங்க தான்.
பெரிய இடத்துக்குப் போறவங்க, என் உழைப்பால் மட்டும் இந்த இடத்துக்கு வந்தோம்னு சொன்னா அது உண்மையில்லை. எல்லாத்துக்கும் சரியான காலமும், நேரமும் அமையணும். அப்படி எல்லா நேரமும், காலமும் அமைந்து நல்ல நபர்களால் எடுக்கப்பட்ட படம். பொங்கல் அன்னைக்கு நல்ல நாள்ல ரிலீஸாகுது. எல்லாரும் தியேட்டர்ல படத்தைப் பாருங்க” என்று சொல்லி தனது நீண்ட உரையை முடித்தார் ரஜினிகாந்த்.