தர்பார் உருவானது எப்படி- ரஜினிகாந்த்

‘சின்ன வயசுல எனக்குத் தெரிஞ்ச டெக்னாலஜின்னா, அது மேல போற ஃபிளைட்டும், தியேட்டர்ல ஓடுற படமும் தான். அப்ப ரஜினி சார் படங்கள் தான் அதிகமா ஓடும். நான், ரஜினி சார் அந்த தியேட்டர்லயே தங்கியிருக்காருன்னு நினைச்சேன்.

 எப்படியும் அவரை பார்த்துவிடலாம் என தியேட்டர் முழுக்க தேடியிருக்கேன். அப்படி இருந்த நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன்’ என தர்பார் திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியது பலரையும் நெகிழ வைத்தது.

டிசம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரவு 11 மணி வரையிலும் நடைபெற்றது.

தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ள, அந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் விழாவில் கலந்துகொண்டு பேசினாலும், சிலர் பேசியது மட்டும் மிக முக்கிய கவனம் பெற்றது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், விவேக் மற்றும் இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 ரஜினி பேசியது முத்தாய்ப்பாக பல தகவல்களைக் கொடுத்தது.
“15 நாட்களுக்கு முன்னால் சுபாஷ்கரன் ஃபோன் செய்தார். நீங்க இரண்டு நாட்கள் லண்டனுக்கு வரவேண்டும். லண்டனிலிருந்து 78 கிலோமீட்டரிலுள்ள நகரத்தில் ஒரு பார்க் இருக்கிறது.
அந்த பார்க்குக்கு உங்கள் பெயரை வைக்கவேண்டும். அரசாங்கத்திடம் எல்லாம் பேசிவிட்டோம். நீங்க வந்து ரிப்பன் கட் பண்ணி வைக்கணும் என்றார். நான் சொன்னேன், இதிலெல்லாம் எனக்கு இஷ்டம் இல்லை.
நாம உயிரோடு இருக்கும்போதே இந்த பார்க், ரோடு இதுக்கெல்லாம் நம்ம பேரை வைக்கக்கூடாது. அப்படி வெச்சா எனக்கு ஏதாவது ஆகிடும்னு சொன்னேன்.
அப்டியா அப்ப வேண்டாம்னு சொல்லிட்டார். நான் அவருக்கு 2.0 படம் பண்ணும்போதே, நீங்க நமக்கு இன்னொரு படம் பண்ணனும் என்று கேட்டார். நான் சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் பண்ணுவதாக வாக்கு கொடுத்ததை சொன்னேன். அதன்பிறகு நாம படம் பண்ணலாம் என்று சொன்னேன்.
பேட்ட முடித்துவிட்டு எந்த டைரக்டரை வெச்சு பண்ணலாம் என்று யோசித்தபோது என் மைண்டில் வந்தது முருகதாஸ் சார் தான். ஒரு பெரிய புரொடக்‌ஷன் கம்பெனியை ஹேண்டில் செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. ரமணா படம் வந்தபோதே அதன் கருத்து, அந்த மேக்கிங், எடுத்த முறை, அதிலிருந்த தத்துவம் எல்லாம் ரொம்ப புடிச்சிருந்தது.
அடுத்து கஜினி படம் பாத்ததும், கண்டிப்பா முருகதாஸோட ஒரு படம் செய்யணும் என்று சொல்லி அப்போதே அவரை சந்தித்தேன்.
அவரிடம் பேசியபோது, ‘நீங்கள் என்னை என் ரசிகர்களிடம் எப்படி காட்டப்போகிறீர்கள் என நான் பாக்கணும்’ என்று சொல்லியிருந்தேன்.
அப்போது நான் சிவாஜி படத்தில் இருந்தேன். அப்போது அவர் கஜினி படத்தை இந்தியில் எடுத்துக்கொண்டிருந்தார். நான் சிவாஜி படம் முடித்துவிட்டு பேசும்போது, அவருடைய கஜினி படம் முடியவில்லை.
முடிய இன்னும் டைம் ஆகும் என்று சொல்லி, அவர் வைத்திருந்த கதையின் ஒன்லைன் சொன்னார். அது பிடித்திருந்தது, இதை வேலை செய்துகொடுக்க 6 மாசம் ஆகும் சார் என்று சொன்னார். சரி நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன்.
அப்போது ஷங்கர் சார் ரோபோ படத்தை நீங்கள் செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு ஆஃபரைக் கொண்டு வந்தார்.
அதில் முழுவதுமாக ஈடுபட வேண்டியதிருந்ததால், நான் முருகதாஸிடம் கேட்டேன். நீங்கள் அந்தப்படத்தை முதலில் முடியுங்கள் என்று சொன்னார் முருகதாஸ். அதன்பிறகு நான் சிங்கப்பூருக்கு சென்றுவந்து லிங்கா படம் நடித்தேன்.
அதன்பிறகு இனி நாம டூயட் எல்லாம் பண்ணவேண்டாம். கபாலி, காலா படம் எல்லாம் பண்ணேன். பேட்ட படத்துல என் கேரக்டரை கார்த்திக் சுப்பராஜ் சொன்னபோது, தம்பி நான் இப்ப அப்படியெல்லாம் பண்றது இல்லை என்று சொன்னேன்.
அவர் தான், நாங்க உங்களை 90களில் எப்படி பாத்தோமோ அப்படி பாக்க விரும்புறோம் என்று சொல்லி அந்த கேரக்டரில் நடிக்கவைத்தார். படம் ரிலீஸான மூன்றாவது நாளே முருகதாஸ் ஃபோன் போட்டு, சார் நீங்க இப்படி கேரக்டர் பண்ணுவீங்கன்னு முன்னாடியே சொல்லியிருந்தா நான் அப்பவே வேற ஸ்டோரி சொல்லியிருப்பேன்னு சொல்லி, ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்து தர்பார் கதையை சொன்னார்.

ரொம்ப ஜனரஞ்சகமா ஒரு கதையை எழுதியிருக்கார் முருகதாஸ். நான் 160 படங்களுக்கும் மேல பண்ணியிருந்தாலும் இந்தப் படம் மாதிரி ஒரு திரில்லர், சஸ்பென்ஸ் படம் நான் பண்ணதில்லை.” என்று தர்பார் கதை தன்னிடம் வந்த கதை குறித்து கூறினார்.

இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது. இதுபோன்ற விழாக்களுக்கெல்லாம் அதிகமாகக் கொடுப்பதில்லை. நான் இந்த அரசாங்கத்தின் மீது பல விமர்சனங்களை வைத்திருக்கிறேன். அது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இந்த இடத்தைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியவர்,

 என் வாழ்வில் நடந்த, யாருக்கும் தெரியாத இரண்டு சம்பவங்களை இங்கு நான் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறி பேச்சை மீண்டும் தொடங்கினார் ரஜினி.

“நான் முதல் முதல்ல தமிழ்நாட்டு மண்ணுல கால் வெச்ச சம்பவத்தை சொல்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி வேற மொழியில் படிச்சிட்டு, அடுத்ததா இங்கிலீஷ் மீடியத்துல போட்டதும் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

 முதல்ல ஃபெயிலாயிட்டு, எப்படியோ கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணிட்டு நான் படிக்கலன்னு சொன்னப்ப, நம்ம குடும்பத்துல யாரும் படிக்கலநீ படிக்கணும்னு சொல்லி ஒரு பணக்கார ஸ்கூல்ல கொண்டுபோய் சேர்த்துவிட்டார்.
அடுத்த எக்சாம் ஃபீஸ் கஷ்டப்பட்டு கடன் வாங்கி 120 ரூபாய் என் கைல கொடுத்தார். எழுதுனா கண்டிப்பா ஃபெயிலாகிடுவேன்னு எனக்குத் தெரியும். கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே, ஃபீஸ் கட்டாம பெங்களூர் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்தேன்.
அங்க இருந்த ஒரு டிரெயினைக் காட்டி எங்க போகுதுன்னு கேட்டேன். தமிழ்நாடு போகுதுன்னு சொன்னாங்க. உடனே டிக்கெட் எடுத்துட்டு ஏறி படுத்துட்டேன். காலைல எழுந்து பாத்தா டிரெய்ன் சென்னைல நிக்குது. இறங்கி ஸ்டேஷனுக்கு வரும்போது, டிக்கெட் செக் பண்றவங்க டிக்கெட் கேட்டாங்க.
அப்பதான் பாக்கெட்ல கைவிட்டு பாத்தா டிக்கெட் இல்லை. டிக்கெட்டை தொலைச்சிட்டேன்னு சொன்னா நம்பாம, நீ டிக்கெட்டே எடுக்கலைன்னு சொன்னாங்க.
நான் அழாத குறையா பேசுனதைப் பாத்து அங்க இருந்த கூலித் தொழிலாளர்கள் இந்த பையனை பாத்தா பொய் சொல்றா மாதிரி இல்லைன்னு சொல்லியும் கேக்கல.
நான் என் பாக்கெட்ல இருந்த பணத்தை எடுத்து காட்டி, என்கிட்ட பணம் இருக்கு. நான் ஏன் டிக்கெட் எடுக்காம வரணும்னு கேட்டதுக்கு அப்பறம் தான் நம்பி அனுப்புனாங்க. அப்படித்தான் எனக்கு தமிழ்நாட்டுக்குள்ள எண்ட்ரி கிடைத்தது” என்றார் ரஜினி.