தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் ரஜினிகாந்த்

இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த திரைக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் நினைவாக இந்த விருது 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியத் திரையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்த பலருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நாகேசுவரராவ், ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன், டி.ராமாநாயுடு, கே.விஸ்வநாத் உள்ளிட்டோர் இந்த விருதை வாங்கியுள்ளனர்.

1996ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசன்  2010ம் ஆண்டு  இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்கான விருது  நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று(25.10.2021) டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தாதா சாகேப் விருதை அவருக்கு வழங்கினார்.

சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காக ரஜினிகாந்தை கவுரவித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் கலந்து கொண்டார்.