ரஜினி சம்பளம் குறைக்கப்பட்டதா?

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த மாதம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. நல்ல வசூல் பார்த்ததாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வினியோகஸ்தர்கள் தர்பார் படம் மூலம் நஷ்டமடைந்துள்ளதாக போர்க்கொடி உயர்த்தினர்.


சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்னால் நஷ்ட ஈடு கேட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபோல் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிலும் முற்றுகையிட்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நஷ்டத்துக்கும் இயக்குனருக்கும் என்ன சம்பந்தம்? முருகதாஸ் வீட்டில் போராட்டம் நடத்தியது ஏற்புடையது இல்லை என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிகண்டனம் தெரிவித்தார்
ரஜினிகாந்த் தற்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் தர்பார் நஷ்டம் காரணமாக முந்தைய படத்துக்கு வாங்கிய ரூ.116 கோடி சம்பளத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் இதை ஏற்று சம்பளத்தை ரூ.58 கோடியாக ரஜினி குறைத்து கொண்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் சம்பளம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு மாறானவை, வதந்தி என்று அவர்கள் கூறினர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. அடுத்த வாரத்தில் இருந்து ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.