கைதி வெற்றிக்கான காரணம்?


குறைவான ஸ்கிரீன்களில் வெளியான கைதி திரைப்படம், ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்று, இப்போது தனது ஸ்கிரீன்களை அதிகரித்துக் கொண்டு வருகிறது. படம் பார்த்தவர்கள், பார்க்கவேண்டாம் என ஒதுக்கியவர்கள், தியேட்டருக்கெல்லாம் போய் யார் சினிமா பாக்குறது?’ என்று யோசித்தவர்கள் என பலதரப்பினரையும் தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கும் கைதி வெற்றிபெற்றதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? பார்ப்போம்.

சதுரங்க வேட்டை திரைப்படத்துக்குப் பிறகு, அனல் பறக்கும் வேகத்துடன் அமைந்த திரைக்கதை கைதி படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். ஒவ்வொரு காட்சியும் படத்தின் அடுத்தடுத்த காட்சிகளுக்கு முக்கியமாக அமைந்ததால், யாருடைய பாப்கார்ன் டப்பாவில் கைவிடுகிறோம் என்பதைக் கூட கவனிக்காமல் ஸ்கீரினை மட்டுமே பார்க்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருந்த விதம், மீண்டும் மீண்டும் கைதி படத்தைப் பார்க்கத் தூண்டியிருக்கிறது.

எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசியது படத்தின் இன்னொரு பலம். தமிழ்நாட்டில் போதை மருந்துகள் எந்தளவுக்கு புழக்கத்தில் இருக்கின்றன என்பதையும், அவை 900 கிலோ அளவில் கூட ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதையும், அப்படி சிக்கும் போதை மருந்துகளை போலீஸ்காரர்களே லாபம் பேசி திருப்பிக் கொடுக்கின்றனர் என்பதையும் நேர்மையுடன் பேசியது மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது.

என்னதான் போலீஸ்காரர்களை மக்கள் பொதுவெளியில் திட்டினாலும், தங்களுக்கு ஒரு பாதிப்பு என்று வரும்போது எந்த யோசனையும் இல்லாமல் சென்று முறையிடும் இடம் போலீஸ் ஸ்டேஷன் தான். போலீஸ் ஸ்டேஷன் என்ற அடையாளத்தை இழந்து நிர்மூலமாக இருக்கும் ஒரு கட்டிடமாக அது மாறியதும், உள்ளே இருக்கும் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் படம் பார்ப்பவர்களை மாற்றிய கைதியின் திரைக்கதை மக்களை வெகுவாகவே ரசிக்க வைத்தது.

பொதுநலம் பேசி, தியாகம் செய்யும் எந்த கேரக்டர்களையும் உருவாக்காமல், ஒரு சாதாரண மனிதனாக இருந்த கேரக்டர்கள் ஒவ்வொரு சாமானியனையும் பிரதிபலித்தன. ‘ரிட்டயர் ஆகுற சூழல்ல என் வீட்டுல 50 போலீஸ்காரங்களுக்கு பார்ட்டி கொடுத்து அவங்க மயக்கம் போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சா என் மானம் போய்டும். நீதான் காப்பத்தணும்’ என்று சொல்லும் ஐ.ஜி கேரக்டரும், ‘50 போலீஸ்காரர்களின் உயிரைவிட, பிறந்ததிலிருந்து பார்க்காத என் குழந்தையை காலையில் பார்க்கவேண்டியதே முக்கியம்’ என்று சொல்லும் டில்லி கேரக்டரும், பணத்துக்காக 900 கிலோ போதை மருந்தை சமூகத்துக்குள் உலவவிடும் நார்காடிக் ஆஃபீஸர், போதை ஆசாமிகளிடமிருந்து கிடைக்கும் பணத்துக்காக போலீஸ்காரர்களையே கொல்ல நினைக்கும் போலீஸ், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் மாணவர்கள் என இத்திரைப்படத்தில் சாமானியனாகவே பல முடிவுகளை எடுத்த கேரக்டர்கள் அதிகம்.

குழந்தைகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எப்போதும் தமிழ் சினிமாவில் தோற்றுப்போனதில்லை. ஏன், நிஜ வாழ்விலுமே குழந்தைக்கு ஒன்று என்றால் தமிழகம் துடிதுடித்துப்போகும். அப்படிப்பட்ட சூழலில் வெளியான கைதி படத்தில், ‘என் குழந்தை முகத்தைப் பார்த்ததே இல்லை சார்’ என்று அவ்வப்போது வசனம் பேசும் டில்லியின் கேரக்டர் தமிழக மக்களின் முகமாக மாறிப்போனார்.

என் குழந்தைக்கு தனியா ஒரு ரூம், கொசு கடிக்காம இருக்க ஒரு ஃபேன், நல்ல ஸ்கூல்ல படிப்பு என்று டில்லி கேட்கும் சில உதவிகள் தான் பெரும்பான்மை தமிழ் மக்கள் தங்களது குழந்தைக்கு செய்ய நினைத்து தினம் தினம் ஓடிக்கொண்டிருப்பதன் காரணம். அப்படிப்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றித் தர உறுதிகொடுத்த போலீஸ்காரரின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுக்கும் சூழல் வரையிலும் சென்ற டில்லியின் கேரக்டர் ஒவ்வொரு மனிதனும் செய்ய நினைத்து முடியாமல் போகும் ஹீரோயிசம்.

தனது குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த தோடுகளை, ‘என் குழந்தைக்கு படிப்பு போதும் சார். நான் கொடுத்தேன்னு சொல்லி உங்க பொண்ணுக்கு கொடுத்துடுங்க’ என்று டில்லி சொல்வதும், ‘டில்லி மாமா கொடுத்தார்னு சொல்லிடுறேன்’ என்று பிஜாய் சொல்வதும், ஓரளவுக்கு மேல் நெருங்கிவிட்ட இருவர் உறவுமுறைக்குள் எளிதாகச் செல்லும் வழக்கம் கொண்ட மதம் தாண்டிய தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போனது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட கைதி படம் தமிழகத்தில் வெற்றிப்படமாக மாறியதில் ஆச்சரியம் இல்லை.