சைரா நரசிம்ம ரெட்டி எப்போது?
பாகுபலி படத்தின் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த தெலுங்குத் திரையுலகம் மீண்டும் அப்படியான முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் ‘சைரா‘’ படத்தின் கதைக்கரு. இந்தப் படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகிறது.
சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இந்தப் படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, அனுஷ்கா, ஜெகபதிபாபு, சுதீப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகர்களும் நடிக்கிறார்கள்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமான முறையில் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது முழுவதும் நிறைவடைந்ததாக ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், “சைரா படப்பிடிப்பு நிறைவடைந்தது. படக்குழுவினர் வழங்கிய கடின உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி. மறக்கமுடியாத பயணமாக அமைந்துள்ளது. திரைப்படம் நன்றாக உருவாகிவருகிறது. வண்ண சேர்ப்பு பணிகள் தொடங்குகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
அமித் திரிவேதி இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.