விஜய்க்கு ஆதரவாக சீமான் அறிக்கை

நடிகர் விஜய்யை விமர்சிப்பவர்கள் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் ஏமாற்றித் தப்பி ஓடியபோது எங்கே சென்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியை ரத்து செய்ய கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

அதோடு, நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.வரி என்பது நன்கொடையல்ல, நாட்டிற்குக் குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என்று அறிவுரை வழங்கினார். நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்ப்புத் தெரிவித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது விஜய் வரிவிலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல.விஜய் தொடர்ந்து முறையாக வரி செலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்த ஆண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அவர் வரி ஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்கு எதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.பாஜகவின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.தான் வாங்கிய சொகுசு காருக்காகச் செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியது எவ்வகையிலும் தவறாகாது. தனக்கான நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித உரிமையாகும். அதைத்தான் விஜய்யும் பயன்படுத்தியிருக்கிறார்.9 ஆண்டுக்கு முன்பாகத் தொடுத்த வழக்கின் கீழ் தற்போது வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வாறு வரிவிலக்குச் சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்நாட்டில் நடந்துள்ளன. எனவே, நுழைவு வரிக்கு விலக்கு கேட்பதும், அளிக்கப்படுவதும் புதிதல்ல.
பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள் என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல், வழக்குத் தொடர்ந்த ஒரே காரணத்திற்காக, விஜய்யை குற்றவாளிபோல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும் நியாயமில்லை. இந்த நாட்டில் வரி வரியாக இருந்தால் தவறில்லை. அது மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது” என்று கூறியுள்ளார்.மேலும் அவரது அறிக்கையில், “ நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை மித்ரா முதுகெலும்பு தசை நார் சிதைவு எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, நோயைக் குணப்படுத்த மரபணு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ரூ.16 கோடி ரூபாயை உலகெங்கும் வாழும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவியுடன் மித்ராவின் பெற்றோர் அரும்பாடுபட்டுத் திரட்டியபோதும், அம்மருந்துகளைப் பெறுவதற்கான மத்திய அரசின் இறக்குமதி வரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றிற்காக மேலும் 6 கோடி ரூபாய்த் தேவைப்படும் நிலை.அதற்கு விலக்கு கேட்டுப் பெறும் கொடுஞ்சூழல் இந்த நாட்டில் தற்போது நிலவுவதை மறுக்க முடியுமா? உயிர்காக்கும் மருந்துகளுக்குக்கூட 16 கோடிக்கு 6 கோடி ரூபாய் வரி என்றால் இந்த நாடு எதை நோக்கிச் செல்லுகிறது? விஜய் வரிவிலக்குச் சலுகை கேட்டதற்காகப் பொங்கித் தீர்க்கும் பெருமக்கள் பல ஆயிரம் கோடியிலான மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டைவிட்டுத் தப்பும்போது என்ன செய்தார்கள்?
அவர்களைத் தப்பிக்கவிட்டு வேடிக்கை பார்த்த மோடி அரசு மீது என்ன விமர்சனத்தை வைத்திட்டார்கள்? இன்றுவரை பல லட்சம் கோடியிலான மக்களின் வரிப்பணம், வாராக்கடனாக மாற்றப்பட்டு ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்குப் பெரும் சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்வி கேட்கவில்லையே ஏன்? அதனையெல்லாம் கண்டும் காணாது போல இருந்து அச்செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்துவிட்டு இப்போது விஜய்யின் வரிவிலக்குச் சலுகை கோரும் வழக்குக்கு எதிராகப் பொங்கித் தீர்ப்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை.
வரி போன்ற அரசின் கொள்கை முடிவுகளே மக்களுக்கெதிராக இருக்கும்போது அதனைக் கூறினாலும், அரசாங்கம் செவிமடுக்காதபோது ஒரு குடிமகனுக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? ஆகவே, சட்டம் தனக்கு வழங்கியுள்ள வாய்ப்பின்படி முறையாகவே நீதிமன்றத்தை நாடினார் விஜய். அதில் பிழையேதுமில்லை.
“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு” என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல, விஜய் மிகுந்த உள உறுதியோடு முன்னேறி வர வேண்டும். விஜய்க்குத் துணை நிற்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நீட் தேர்வு மற்றும் ஒளிபரப்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக, நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜகவினர் குரல் எழுப்பினர். அப்போது சீமான் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.