நண்பனுக்காக சீறும் ஜீவா

கொரில்லா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள சீறு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதை அம்சத்துடன் குரங்குடன் இணைந்து நடித்த ஜீவா அடுத்ததாக ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் நடித்திருக்கும் படம் தான் ‘சீறு’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனஸ் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள திரைப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.இந்தப்படத்தின் ட்ரெயிலர் ஜனவரி 23வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

’எல்லாருக்கும் கனவு காணுற உரிமை இருக்கு, ஆனா உன்னோட கனவு என் கனவ கலைக்கக் கூடாது’ என்ற உண்மை வரிகளுடன் ஆரம்பமாகும் ட்ரெயிலர் வெட்டு, குத்து, அடிதடி என்று ஆக்‌ஷனுக்கு நகர்கிறது.
அதிரடி வசனங்கள், அண்ணன் தங்கை பாசம் என்று வழக்கமான தமிழ் சினிமா பாணியில் காட்சிகளை அமைத்திருக்கும் சீறு ட்ரெயிலர், அதனை எவ்வாறு புதுவிதமாகக் கூறப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் இடம்பெறும், ‘உதவிங்கிறது முதுகுக்குப் பின்னாடி இருக்கிற மச்சம் மாதிரி, அதைப் பாக்க முடியாது.’, ‘வாழ்க்கையில உன் எதிரி கிட்ட கூட நீ தோத்து போகலாம். ஆனா ஒரு செகண்ட் கூட உன் கிட்ட நீ தோத்துப் போயிரக் கூடாது’, ‘ஃப்ரெண்டுன்னா ஃபேஸ் புக்கில லைக் கொடுக்கிற ஃப்ரெண்டுன்னு நெனச்சியா? லைஃபே கொடுக்கணும்டா’ போன்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் வாங்கியுள்ள இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நவ்தீப், சதீஷ், வருண் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.