தேர்தலா – நீதிமன்றமா காத்திருக்கும் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும், மூன்று மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நடிகர்கள் திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்டி எத்தனையோ படங்களில் மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், நடிகர்களுக்குள்ளாகவே ஆக்‌ஷன் காட்சிகளும் திருப்புமுனையும் ஏற்பட்டது சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்ட 2015 நடிகர் சங்கத் தேர்தலில்தான்.

 வெற்றிபெற்று நடிகர் சங்கப் பொறுப்புகளில் விஷால் தலைமையிலான அணி அமர்ந்திருந்த காலத்தில் எண்ணற்ற சர்ச்சைகளும், பிரச்னைகளும் வெடித்தன. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக பார்க்கப்பட்டது, நான்காண்டு ஆட்சிக் காலம் முடிந்து 2019இல் நடைபெறும் தேர்தல் தான்.
எனவே, திரைக் கலைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் 2019ஆம் வருடன் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை, கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணி எதிர்த்துப் போட்டியிட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிரணியைச் சேர்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கின்றனர் என்றும், பொய்யான காரணங்கள் சொல்லி உறுப்பினர்களை நீக்குகிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றபோது, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதன்படியே தேர்தல் நடைபெற்று முடிந்தாலும், பல்வேறு குளறுபடிகள் தேர்தலில் நடைபெற்றிருக்கிறது என நடிகர் சங்க உறுப்பினர்களான பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடித் தீர்ப்புக்கு வழியில்லை என்பதால் வாக்கு எண்ணிக்கையை தடை செய்துவிட்டு, நீதிமன்றத்தின் சார்பில் தனி அதிகாரியாக கீதா என்பவரை நியமித்து, சங்கத்தின் நிர்வாக மேற்பார்வையை நடத்த வழிசெய்தது.

இதனை எதிர்த்தும், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணவேண்டும் என்றும் கார்த்தி, விஷால், நாசர் ஆகியோர் மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை இன்று வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில் “நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தவேண்டிய கடமைகளை பதவிக்காலம் முடியும் முன்னரே செய்திருக்கவேண்டும். ஆனால், பதவிக்காலம் முடிந்த பின்னர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டதுடன், பதவியில் இல்லாதபோது பல ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
 இது விதிகளுக்கு எதிரானது. இதனடிப்படையில் நடைபெற்ற தேர்தலையும், அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளையும் எண்ணி முடிவினை அறிவிக்கமுடியாது.

எனவே, மூன்று மாதத்திற்குள் நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியலை சரிபார்த்து, அதனடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும் என்றும், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்றும், அதுவரை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி கீதா அவரது பதவியில் இருந்து நிர்வாகத்தை கவனிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இரு தரப்பும் நீதிமன்ற தீர்ப்பு ஆவணமாக கைக்கு வரட்டும் என்று காத்திருக்கும் அதேசமயம், விஷால் தலைமையிலான அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்