மெளனம் காக்கும் ஜகமே தந்திரம் தயாரிப்பாளர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகளும் நிறைவடைந்து வெளீயீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே இந்தப் படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகப்போவதாக அவ்வப்போது செய்தி வரும். அதைப் படக்குழுவினர் மறுத்துவந்தனர்.
ஆனால் இப்போது நேரடியாக இணையத்தில் படம் வெளியாவது உறுதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சுமார் நாற்பத்தைந்து கோடி ரூபாய்க்கு இப்படம் வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன என்றும் மார்ச் 12 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சஷிகாந்திடம் கேட்டால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லாதவரை எதையும் நம்ப வேண்டியதில்லை என்கிறார்.