சிம்புவுக்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.இந்நிலையில், நடிகர்சிம்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அவரின் அம்மாவான உஷா ராஜேந்தர். சிம்புவுக்கு பச்சை நிற மினி கூப்பர் காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்து இன்ப அதிர்ச்சியிலேயே உறைந்துப் போய்விட்டாராம் சிம்பு.

இதற்கு ஒரே காரணம் தான் சொல்லப்படுகிறது. முன்பு மாதிரி இல்லாமல், சரியான நேரத்துக்கு ஷூட்டிங், குறிப்பாக, தவறாமல் ஷூட்டிங் செல்வதற்காகவே இந்த அன்பு பரிசாம். சமீபத்தில் தான் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை 30 நாட்களுக்குள் ஒரே ஷெட்யூலாக நடித்துக் கொடுத்தார் சிம்பு. அதைத்தொடர்ந்து, தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.

நிவர் புயலின் போது, ஒட்டுமொத்த படக்குழுவும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்தது. பைக் சேசிங் சீன்கள் படமாக்கியிருக்கிறார்கள். கூடவே, ஆக்‌ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, சிம்பு கடலூரில் தங்கியிருந்தார். புயலினால் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் வரலாம் என்று யோசித்திருக்கிறது படக்குழு.

ஆனால், சென்னை திரும்பிவிட்டால் பாதியிலேயே விட்டு சென்ற மாதிரி இருக்கும். சோர்வும் தட்டிவிடும். அதனால், கையோடு முடித்துவிட்டு சென்று விடுவோம் என்று சொன்னவரே சிம்பு தானாம். இப்போது படக்குழு படப்பிடிப்பில் பிஸியா இருக்கிறது. சிம்புவின் அம்மாவின் அன்புப் பரிசுக்கு இந்த சம்பவத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம்…