திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நிவர் புயல் காரணமாக தனது பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள், போஸ்டர்கள், கொண்டாட்டங்களைத் தவிர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமென உதயநிதி கேட்டுக்கொண்டார். இதனால், பல இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் திமுகவினர்.
பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற உதயநிதி, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று, அங்கும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
உதயநிதிக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சமத்துவ மக்கள் கழக பொதுச் செயலாளர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். இதனையெல்லாம் விட பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், உதயநிதி இல்லத்திற்கே வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டுச் சென்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில் உதயநிதியை விமர்சித்தும், திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேட்டியளித்துள்ள எஸ்.வி.சேகர் நேரில் வந்து வாழ்த்தியது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
தொண்டர்களிடம் வாழ்த்து பெற்ற பிறகு அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற உதயநிதி, அங்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துபெற்றார்.