ட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்!

ட்ரெண்ட்டிங் ஜாப்பில் முதல் வரிசையில் முதலிடம் பிடிப்பது யூடியூப் சேனல். இந்தச் சமூகத்தில் நிறுவனங்களின் எண்ணிக்கைக்கும், உற்பத்திக்கும் பஞ்சமே இல்லை.
உதாரணத்திற்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியின் உச்ச நிலையில் இருந்தபோது சென்னை நகரங்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் ஆங்காங்கே கட்டப்பட்டன. லட்சங்களிலும், கோடிகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. பெரிதாக விளம்பரப்படுத்தியிருந்தாலும், விற்பனை என்னவோ எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஏனெனில் மக்களின் ரசனைக்குத் தகுந்தாற்போல் அந்த விளம்பரங்கள் எடுத்துச் செல்லவில்லை என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஊடகங்களை பொறுத்தவரையில் அச்சுத்துறை, தொலைக்காட்சி, வானொலி என்ற விஷயங்களைக் கடந்து தற்போது டிஜிட்டல் மீடியம் என்ற ஒன்று அதிகபட்ச வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஒரு நிறுவனம் தன்னுடைய பொருளை சந்தைப்படுத்த தினசரிகளையும், தொலைக்காட்சிகளையும் நம்பியிருந்த நிலை தற்போது மாறி யூடியூப் சேனல்களையும் அணுகி வருகிறது.
மக்கள் மத்தியில் ஊடகங்களின் பெருமதிப்புதான் விளம்பரங்களின் விலையாக நிர்ணயிக்கப்படும். இந்த விளம்பரக் கட்டணங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்த நிலையில், சிறு நிறுவனங்களால் அத்தகைய செலவினங்கள் எட்டா உயரத்திலேயே இருந்தது. அதனால், பெரு நிறுவனங்கள் வளரும் அளவிற்கு, சில நிறுவனங்களால் முடிவதில்லை. இது சில ஆண்டுகளுக்கு முன்பான நிலை. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். வழக்கமான ஊடகங்களைக் கடந்து இன்று பெரு நிறுவனங்கள் கூட யூடியூப் சேனல்களை நம்ப ஆரம்பித்துவிட்டன. இதனால், பெரு ஊடகங்களின் வணிகம் சரிய ஆரம்பித்திருக்கிறது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம்.
மக்கள் கூடும் இடங்களில் வியாபாரம் பெருகும். இதுதான் வியாபாரத்தின் தாரக மந்திரம். அந்த மக்கள் கூடும் இடமாகத்தான் தற்போது யூடியூப் சேனல் மாறியுள்ளது. யூடியூப் சேனலை ஆரம்பிப்பது மிகமிக சுலபம். ஒரு மெயில் ஐ.டி.யும் உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனும் இருந்தால் போதும் நீங்கள் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை உருவாக்க முடியும்.
வேலைவாய்ப்பைத் தேடி நீங்கள் செல்லவேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கான வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், உங்களுடைய நண்பர்களுக்கான வேலைவாய்ப்பையும் நீங்களே உருவாக்கிக்கொடுக்கலாம்.
யூடியூப் சேனலை உருவாக்குவது ஐந்து நிமிட வேலை. ஆனால் அதை பிரபலப்படுத்துவதுதான் மிகப்பெரிய சவால்.
இந்த சவாலை ஜெயிக்கத் தெரிந்துவிட்டால், மாதம் குறைந்தது ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.
ஸ்மார்ட் ஃபோன் இருக்குது, மெயில் ஐ.டி.யும் இருக்காது, யூடியூப் சேனலும் ஆரம்பித்துவிட்டேன். அடுத்ததாக என்ன செய்வது? இதுதான் பெரும்பாலனவர்களின் கேள்வி.
ஒரு யூடியூப் சேனலை உருவாக்க நினைத்துவிட்டால் முதலில் உங்களுக்குள் நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கியிருக்கும் இந்த யூடியூப் சேனல் வெறும் பொழுதுபோக்கிற்கானதா? அல்லது உங்கள் எதிர்காலத்திற்கானதா? என்பதை முடிவு செய்யுங்கள்.
நீங்கள் உருவாக்கும் அந்த யூடியூப் சேனல் உங்கள் வாழ்வாதாரத்திற்கானதாவும், உங்கள் எதிர்காலத்திற்கானதாகவும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், புத்திசாலித்தனத்துடனும், சீரிய முயற்சியுடன் களத்தில் இறங்க வேண்டும்.
உங்களைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கூர்ந்து உற்று நோக்குங்கள். நடக்கும் நிகழ்வுகளை சுவராஸ்யம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, துணுக்கு, பொதுஅறிவு என்ற பிரிவுகளில் வகைப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்ததாக தொடர்ந்து நிறைய யூடியூப் சேனல்களை பார்க்கத் தொடங்குங்கள். அதிகபட்ச பார்வையாளர்கள் கொண்ட யூடியூப் சேனலை அடையாளம் கண்டு அந்த சேனல் குறித்து ஒரு ஆய்வறிக்கை தயார் செய்யுங்கள் (நீங்கள் பட்டப் படிப்பு மேற்கொள்ளும்போது புராஜக்ட் தயாரித்திருப்பீர்களே, அது மாதிரி…). உங்கள் ஆய்வறிக்கை, ஒரு யூடியூப் சேனலை மக்கள் அதிகம்பேர் பார்ப்பதற்கான காரணங்களை மையப்படுத்தியே இருக்க வேண்டும். அதேமாதிரி மிகக் குறைச்சலாக பார்க்கும் யூடியூப் சேனல் குறித்தான ஆய்வறிக்கையையும் தயார் செய்யுங்கள்.
இந்த இரண்டு ஆய்வறிக்கைகளும் உங்களுக்கு ஒரு உண்மையை உணர வைக்கும். அந்த உண்மைதான் உங்கள் வெற்றிக்கான அடிப்படை மந்திரம்.